செய்திகள்
கொரோனா பரிசோதனை

பெங்களூருவில் தவறான முகவரி, செல்போன் எண் வழங்கும் கொரோனா நோயாளிகள்

Published On 2020-07-09 03:50 GMT   |   Update On 2020-07-09 03:50 GMT
பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை கொடுப்பதில் தவறான தகவல்கள் அளிப்பதால் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் சுகாதாரத்துறையினர் திணறி வருகின்றனர். போலீசார் உதவியுடன் கொரோனா பாதித்தவர்களை ஆஸ்பத்திரியில் சேர்க்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
பெங்களூரு :

பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை கொடுப்பதில் தவறான தகவல்கள் அளிப்பதால் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் சுகாதாரத்துறையினர் திணறி வருகின்றனர். போலீசார் உதவியுடன் கொரோனா பாதித்தவர்களை ஆஸ்பத்திரியில் சேர்க்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக சராசரியாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை, அவர்களை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வருவதில்லை என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அதுபோன்ற சம்பவங்களும் பெங்களூருவில் அரங்கேறி வருகிறது.

அதே நேரத்தில் கொரோனா பரிசோதனைக்கு உள்ளாகும் நபர்கள் சுகாதாரத்துறையினரிடம் தவறான தகவல்களை அளிக்கும் சம்பவங்களும் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதாவது பரிசோதனைக்கு உள்ளாகும் நபர்கள் தவறான செல்போன் எண்ணை கொடுப்பது, வீட்டு முகவரியை தவறாக கொடுப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தவறான தகவல்கள் கொடுப்பதால், பரிசோதனை நடத்தியவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதும், அவர்களை கண்டுபிடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்க முடியாமல் சுகாதாரத்துறையினர் திணறி வருகின்றனர்.

இதையடுத்து, தவறான தகவல்களை கொடுத்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களை போலீசாரின் உதவியுடன் தேடி கண்டுபிடித்து சுகாதாரத்துறையினர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து வருகின்றனர். இன்னும் சிலர் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக சுகாதாரத்துறை ஊழியர்கள் கூறியதும், தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அவ்வாறு சுவிட்ச் ஆப் செய்யும் நபர்களை போலீசாரின் உதவியுடன், அவர்கள் இருக்கும் இருப்பிடத்தை அறிந்து கொண்டு, அங்கு சென்று அந்த நபர்களை பிடித்து சென்று ஆஸ்பத்திரியில் சுகாதாரத் துறையினர் அனுமதித்து வருகின்றனர்.

மேலும் சிலர் கொரோனா தொற்று இருப்பது உறுதியானதும் தங்களை சுகாதாரத்துறை ஊழியர்கள் அழைத்து சென்று அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து விடுவார்கள் என்பதால், தாங்களேவே சென்று தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக பெங்களூருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தினமும் கொரோனா தொற்று ஏற்படுவதால், பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News