செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா பரவலை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவது சாத்தியமா?

Published On 2020-07-08 06:54 GMT   |   Update On 2020-07-08 06:54 GMT
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகுவது சாத்தியமா என்ற சந்தேகத்தை ஸ்பெயின் நாட்டில் நடந்த ஆய்வு எழுப்பி உள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 1 கோடியே 16¼ லட்சத்துக்கும் அதிகமானோரை பாதித்து இருக்கிறது. 5.38 லட்சம் பேரை பலி கொண்டிருக்கிறது. இன்னும் இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.

இதன்காரணமாக கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ‘ஹெர்டு இம்யூனிட்டி’ என்று அழைக்கப்படுகிற மந்தை எதிர்ப்பு சக்தி (நோய் எதிர்ப்பு சக்தி) தீர்வு ஆகுமா என்ற கேள்வி எழுந்தது. எந்தவொரு தொற்று நோய்க்கும், தடுப்பூசி கண்டுபிடித்து மொத்த மக்கள் தொகையில் 70 முதல் 90 சதவீத மக்களுக்கு செலுத்தி மந்தை எதிர்ப்பு சக்தி (நோய் எதிர்ப்புச்சக்தியை) உருவாகி, மற்றவர்களுக்கு பரவுதை தடுக்க முடியும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

தடுப்பூசி சாத்தியம் இல்லாதபோது, சமூகத்தில் பெரும்பாலான மக்களுக்கு தொற்றை பரவ விட்டு, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முடியும். ஆனால் தொற்று நோயின் வீரியம் தெரியாமல் பரவ விட்டால் அது ஆபத்தில் முடியும் வாய்ப்பும் உண்டு.

இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிராக மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகுமா என ஸ்பெயின் நாட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று 2.51 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதித்து இருக்கிறது. 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.

60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் வெறும் 5 சதவீத மக்களுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபாடி) உருவாகி உள்ளதாக ஸ்பெயின் தேசிய தொற்றுநோயியல் மையத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த தகவலை ‘லேன்செட்’ மருத்துவ பத்திரிகை தெரிவித்து இருக்கிறது. அதுவும் கடலோரப்பகுதிகளில் இது 3 சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் ஸ்பெயினில் பரவலாக அதிகளவில் பாதிப்புக்குள்ளான மேட்ரிட் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இது 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

இந்த ஆய்வை நடத்திய ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றி கூறும்போது, “ஸ்பெயினில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும், பரவலான மதிப்பீடுகள் குறைவாகவே உள்ளன. இது மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உருவாக போதுமானதாக இல்லை” என்று கூறி உள்ளனர். எனவே கொரோனாவை தடுக்க மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், பொது சுகாதார நடவடிக்கைகளை பராமரிப்பதுதான் கொரோனா பரவலை தடுக்க வழி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News