செய்திகள்
விதிமுறை மீறிய நபரை தூக்கிச் செல்லும் சுகாதாரத்துறை ஊழியர்கள்

வெளிநாட்டில் இருந்து வந்து ஜாலியாக ஊர் சுற்றிய வாலிபர்: கைகால்களை கட்டி தூக்கிச் சென்ற சுகாதாரத்துறை

Published On 2020-07-07 11:45 GMT   |   Update On 2020-07-07 11:45 GMT
முகக்கவசத்தை முறையாக அணியாமல் சாலையில் சுற்றித்திரிந்த நபரை சுகாதாரத்துறையினர் கட்டி ஆம்புலன்ஸில் தூக்கிச்சென்ற சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு முடக்கத்திற்குப் பின்னர் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனா காலத்தில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகள் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று கேரள மாநிலம் பத்தனம்திட்டா புனித பீட்டர்ஸ் சந்திப்பு பகுதியில் ஒருவர் முகக் கவசத்தை முழுமையாக அணியாமல் சுற்றிதிரிவதாகவும், சொன்னாலும் அவர் கேட்க மறுப்பதாகவும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 43 வயதுடைய அந்த நபர் கடந்த 4 நாட்களுக்கு முன் குவைத்தில் இருந்து வந்தது தெரியவந்தது. அத்துடன் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் விதிகளை மீறி முகக்கவசம் அணியாமல் திரிந்தது அறியப்பட்டது.

இதையடுத்து போலீஸார் கொடுத்த தகவலின்படி கவச உடையுடன் வந்த சுகாதாரத்துறையினர், தப்பிக்க முயன்ற அந்த நபரை விரட்டிப்பிடித்து கைகால்களை கட்டி ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு சென்றனர். தற்போது அந்த நபர் எர்ணாகுளம் கோளஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர்மீது பத்தனம்திட்டா போலீஸார் கொரோனா ஒழிப்பு தனிமைப்படுத்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News