செய்திகள்
வைரல் புகைப்படம்

கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் இவரா? வைரலாகும் பகீர் தகவல்

Published On 2020-07-07 04:21 GMT   |   Update On 2020-07-07 04:21 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பு மருந்து சோதனையில் இவரே தானாக முன்வந்து முதல் நபராக சோதனை செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்தை கோவாக்சின் எனும் பெயரில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில், பெண்மணி ஒருவர் ஆணின் நரம்புகளில் ஊசி போடுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  வைரல் புகைப்படத்தில் இருப்பது பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனத்தின் துணை தலைவர் விகே ஸ்ரீனிவாஸ் என்றும், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து முதலில் இவர் மீது சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

"டாக்டர் வி.கே. ஸ்ரீனிவாஸ், பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணை தலைவர் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்கிறார். மருந்தை எடுத்துக் கொண்டதும் தான் உருவாக்கிய தடுப்பு மருந்தை இந்தியாவில் எடுத்துக் கொண்ட முதல் நபர் நான் தான், பாரத் பயோடெக் நிறுவன குழு இந்த மருந்து நல்ல பலன் அளிக்கும் என நம்புகின்றனர்." என தெரிவித்ததாக வாட்ஸ்அப், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தகவல் வைரலாகி வருகிறது.  



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில் கொரோனா தடுப்பு மருந்து சோதனைகள் நடைபெறவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் பாரத் பயோடெக் நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. வைரல் புகைப்படம் வழக்கமான சோதனைக்காக ஊழியர்களிடம் இருந்து இரத்த மாதிரி சேகரிக்கும் போது எடுக்கப்பட்டது என பாரத் பயோடெக் தெரிவித்து இருக்கிறது.

இந்த தகவல் வைரலாக துவங்கியதும், பாரத் பயோடெக் சார்பில் வைரல் தகவல்களில் உண்மையில்லை என ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் வைரல் தகவல்களில் உள்ளது போன்று கொரோனாவுக்கு தடுப்பு மருந்து சோதனை இதுவரை நடத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News