செய்திகள்
எடியூரப்பா

சொந்த ஊருக்கு யாரும் திரும்பி செல்ல வேண்டாம்: எடியூரப்பா வேண்டுகோள்

Published On 2020-07-07 02:31 GMT   |   Update On 2020-07-07 02:31 GMT
கொரோனாவை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பெங்களூருவை காலி செய்துவிட்டு யாரும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் உலக அளவில் பெங்களூரு மாநகர் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு கல்வி கற்கவும், தொழில் நிறுவனங்களில் வேலை செய்யவும் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, டெல்லி, ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கியிருந்து வருகிறார்கள். பெங்களூருவில் அதிகாரப்பூர்வமாக 1 கோடியே 23 லட்சம் பேர் குடியிருந்து வருவதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டு மொத்த கர்நாடகத்தின் நிதி வருவாயில் பெங்களூரு மாநகர் மூலம் மட்டும் 90 சதவீத வருமானம் அரசுக்கு கிடைத்து வருகிறது. இதனால் பெங்களூரு, கர்நாடகத்தின் தவிர்க்க முடியாத பகுதியாக இன்று வளர்ந்து வருகிறது. சிலிக்கான் சிட்டி என்று அழைக்கப்படும் பெங்களூரு தொழில்நுட்ப நிறுவனங்களின் புகழிடமாக திகழ்கிறது.

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையொட்டி கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பெங்களூருவில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்தியாவில் பெருநகரங்களான சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. ஆனால் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. இதை பார்த்து மற்ற மாநிலங்கள் வியப்படைந்தன. மேலும் பல்வேறு மாநில மக்கள் வசித்து வரும் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதையும், அரசின் தடுப்பு நடவடிக்கையையும் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி முதல்-மந்திரி எடியூரப்பாவை அழைத்து பாராட்டும் தெரிவித்து இருந்தார்.

இது ஒருபுறம் இருக்க 2 மாத ஊரடங்கால் பெங்களூருவில் இயங்கி வந்த பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் வேலை இழந்த வெளிமாநிலத்தினர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர். அதுபோல் கர்நாடகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று விட்டனர். இதைதொடர்ந்து கொரோனா தடுப்பு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டது. அதாவது பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால் கர்நாடக அரசின் வருவாய் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. இதனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், தொழிற்சாலைகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க கடந்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் வெளிமாநிலத்தினர், வெளிமாவட்டத்தினர் பெங்களூருவுக்கு வரத் தொடங்கினர். இதன் காரணமாக தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க தொடங்கின. மூடிக்கிடந்த தொழில்நுட்ப நிறுவனங்களும் குறைந்த பணியாளர்களுடன் பணியை தொடங்கினர். இத்தகைய சூழ்நிலையில் தற்போது பெங்களூருவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. சராசரியாக 50, 60-க்குள் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயரத் தொடங்கியது. கடந்த மாதம் இறுதியில் 500, 600, 700 என்ற ரீதியில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடக்க தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக தலைநகர் பெங்களூருவில் கொரோனாவின் பாதிப்பு வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அத்துடன் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால் பெங்களூருவில் இருக்கும் வெளிமாவட்ட தொழிலாளர்கள் மற்றும் பிற மாநிலத்தவர்கள், கொரோனாவுக்கு பயந்து பெட்டி-படுக்கைகளுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள். பெங்களூருவில் கொரோனா வேகமாக பரவுவதால், தங்களையும் வைரஸ் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். பெங்களூருவில் வசித்து வந்த பிற மாவட்ட மக்கள் சாரை... சாரையாக வாகனங்களில் மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள். இதனால் முக்கிய சாலைகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. பெங்களூருவில் இருந்து பிற மாவட்டத்தினர் சொந்த ஊர் திரும்புவதால் பெங்களூருவில் தொழில்கள் முடங்கி, அரசின் வருவாய் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

இதை அறிந்த மாநில போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, பெங்களூருவில் இருக்கும் வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா, பெங்களூருவில் இருந்து வெளிமாவட்டத்தினர் சொந்த ஊர் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “பெங்களூருவில் கொரோனாவை தடுக்க அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் பெங்களூருவில் இருக்கும் வெளிமாவட்ட தொழிலாளர்கள் மற்றும் பிற மாநிலத்தினர், கொரோனாவுக்கு பயந்து சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News