செய்திகள்
சித்தராமையா

3 மந்திரிகளை நியமித்தது கொரோனாவை தடுக்கவா?: சித்தராமையா கேள்வி

Published On 2020-07-06 04:00 GMT   |   Update On 2020-07-06 04:00 GMT
பெங்களூருவில் வைரசை தடுக்க 3 மந்திரிகள் நியமனம் செய்யப்பட்டிருப்பது, கொரோனாவை தடுக்கவா? அல்லது கருத்துவேறுபாட்டை சரிசெய்யவா? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பெங்களூருவில் சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால், கொரோனா நோயாளி இறந்தார். இதற்காக மாநகராட்சி கமிஷனர் அனில்குமார் இறந்தவரின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதன் மூலம் அனில்குமார் மற்ற அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக மாறியுள்ளார். அவரது இந்த மனிதநேய செயலை நான் பாராட்டுகிறேன்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக முதல்-மந்திரியை பிரதமர் பாராட்டியுள்ளார். தினமும் பத்திரிக்கைகளில் கொரோனா தடுப்பில் ஏற்பட்டுள்ள தோல்விகள் குறித்து பிரதமருக்கு காட்டியிருந்தால் இன்னும் சிறப்பான முறையில் பாராட்டி இருப்பாரோ என்னவோ.

கொரோனா தடுப்பு பணிகளுக்கு எவ்வளவு நிதி வழங்கியுள்ளர்கள், பிரதமர் கேர் நிதியில் இருந்து கர்நாடகத்திற்கு எவ்வளவு அனுப்பி இருக்கிறீர்கள் என்று பிரதமரிடம் முதல்-மந்திரி கேட்டிருக்க வேண்டாமா?. குறைந்தபட்சம் பொய் வாக்குறுதிகளையாவது கொடுத்திருந்தால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்திருப்பார்கள். அதை கூட ஆட்சியாளர்கள் செய்யவில்லை.

பெங்களூருவில் கொரோனாவை தடுக்க 3 மந்திரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை நியமனம் செய்திருப்பது, கொரோனாவை தடுக்கவா? அல்லது கருத்து வேறுபாடுகளை சரிசெய்யவா?. இந்த மூன்று மந்திரிகள் அதில் எந்த வேலையை செய்ய இருக்கிறார்களாம்.

கொரோனா தடுப்பு உபகரணங்களை கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளேன். அதற்கு ஆதாரங்களை வெளியிடட்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு சவால் விட்டுள்ளார். பல்லாரியை சேர்ந்த உங்களின் சகோதரர்கள் (ரெட்டி சகோதரர்கள்) இதே போல் சவால் விட்டு இறுதியில் சிறைக்கு சென்றனர். அதனால் நீங்கள் சவால் விடும்போது அது உங்களின் கவனத்தில் இருக்கட்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News