செய்திகள்
கொரோனா பரிசோதனை

பெங்களூருவில் ஒரேநாளில் 1,235 பேருக்கு கொரோனா: கர்நாடகத்தில் பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்தது

Published On 2020-07-06 03:27 GMT   |   Update On 2020-07-06 03:27 GMT
கர்நாடகத்தில் ஒரேநாளில் கொரோனா வைரசுக்கு 37 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக மாநில தலைநகர் பெங்களூருவில் ஒரேநாளில் 1,235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு :

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் தற்போது கோர முகத்தை காட்டி வருகிறது. புதுடெல்லி, மராட்டியம், தமிழகத்தை அடுத்து தற்போது கர்நாடகத்திலும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதாவது இதுவரை இல்லாத அளவுக்கு கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் வைரஸ் தொற்று பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. மாநிலத்தில் நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 1,925 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் தலைநகர் பெங்களூருவில் மட்டும் 1,235 பேரை கொரோனா தாக்கியுள்ளது.

மேலும் நேற்று ஒரே நாளில் 37 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்பும் வேகமாக அதிகரிப்பதால் கர்நாடக அரசு மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்றைய பாதிப்பு குறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 21 ஆயிரத்து 210 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஏற்கனவே வைரஸ் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த 37 பேர் நேற்று பலியானார்கள். அதன்படி நேற்று இறந்தவர்கள் போக கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 173 ஆக இருந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று புதிதாக 1,925 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 98 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கொரோனாவுக்கு 339 பேர் பலியாகி இருந்த நிலையில், நேற்று ஒரேநாளில் வைரஸ் தாக்குதலுக்கு 37 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இதன்மூலம் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 376 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9,847 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 603 பேர் அடங்குவர்.

புதிதாக கொரோனா பாதித்தோரில், பெங்களூரு நகரில் 1,235 பேர், தட்சிண கன்னடாவில் 147 பேர், பல்லாரியில் 90 பேர், விஜயாப்புராவில் 51 பேர், கலபுரகியில் 49 பேர், உடுப்பியில் 45 பேர், தார்வாரில் 45 பேர், பீதரில் 29 பேர், மைசூருவில் 25 பேர், கொப்பலில் 22 பேர், உத்தரகன்னடாவில் 21 பேர், சாம்ராஜ்நகரில் 19 பேர், ஹாவேரியில் 15 பேர், ஹாசனில் 14 பேர், சிக்பள்ளாப்பூர், துமகூரு, கோலாரில் தலா 13 பேர், பெலகாவி, தாவணகெரேயில் தலா 11 பேர், ராய்ச்சூர், மண்டியாவில் தலா 10 பேர், சிக்கமகளூருவில் 9 பேர், சிவமொக்காவில் 8 பேர், கதக்கில் 7 பேர், ராமநகரில் 6 பேர், பாகல்கோட்டையில் 4 பேர், சித்ரதுர்காவில் 3 பேர் உள்ளனர். யாதகிரி, பெங்களூரு புறநகர், குடகு ஆகிய 3 மாவட்டங்களில் நேற்று பாதிப்பு ஏற்படவில்லை.

நேற்று கர்நாடகத்தில் கொரோனாவுக்கு 37 பேரில் பெங்களூருவில் மட்டும் 16 பேர் அடங்குவர். மேலும் தாவணகெரேயில் 2 பேர், சிக்பள்ளாப்பூரில் ஒருவர், ஹாசனில் ஒருவர், கலபுரகியில் 2 பேர், மைசூருவில் ஒருவர், துமகூருவில் ஒருவர், பெலகாவியில் 2 பேர், தார்வாரில் ஒருவர், பீதரில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 28 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள். இவர்களில் 50 வயதுக்கு உட்பட்டோர் 7 பேர் உள்ளனர்.

கர்நாடகத்தில் இதுவரை 7 லட்சத்து 6 ஆயிரத்து 425 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 16 ஆயிரத்து 899 மாதிரிகள் அடங்கும். 53 ஆயிரத்து 803 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்து 251 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில், 243 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெங்களூருவில் மட்டும் 132 பேர் உள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News