செய்திகள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு தேசிய பெண்கள் ஆணையத்தில் குவிந்த புகார்கள்

Published On 2020-07-04 09:29 GMT   |   Update On 2020-07-04 09:29 GMT
கடந்த மாதம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக தேசிய பெண்கள் ஆணையத்துக்கு 2 ஆயிரத்து 43 புகார்கள் வந்துள்ளன. கடந்த 8 மாதங்களில் இதுவே அதிகம் ஆகும்.
புதுடெல்லி:

தேசிய பெண்கள் ஆணைய புள்ளி விவரங்களின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த மாதம் மட்டும் 2 ஆயிரத்து 43 புகார்கள், ஆணையத்துக்கு வந்துள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆயிரத்து 379 புகார்கள் வந்தன. அதன்பிறகு இதுவே அதிகம் ஆகும்.

இவற்றில், மனரீதியான, உணர்வுரீதியான துன்புறுத்தல் தொடர்பாக அதிகபட்சமாக 603 புகார்கள் வந்துள்ளன. அடுத்தபடியாக, குடும்ப வன்முறை தொடர்பாக 452 புகார்கள் வந்துள்ளன.



வரதட்சணை கொடுமை தொடர்பாக 252 புகார்களும், பெண்கள் மானபங்கம் தொடர்பாக 194 புகார்களும், பெண்கள் மீதான போலீசாரின் பாரபட்சம் தொடர்பாக 113 புகார்களும், சைபர்கிரைம் தொடர்பாக 100 புகார்களும், கற்பழிப்பு மற்றும் கற்பழிப்பு முயற்சி தொடர்பாக 78 புகார்களும், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 38 புகார்களும், வரதட்சணை மரணங்கள் தொடர்பாக 27 புகார்களும் வந்துள்ளன.

இதுகுறித்து தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா கூறியதாவது:-

புகார்கள் அதிகரித்து இருப்பதற்கு நாங்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்குவதுதான் காரணம். டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து வழக்குகளை எடுத்துக் கொள்கிறோம். புகார் தெரிவிக்க ‘வாட்ஸ்அப்‘ எண்ணையும் வெளியிட்டுள்ளோம். தூர்தர்ஷனிலும் விளம்பரம் வெளியிட்டோம்.

பெண்கள் நலனுக்காகவே நாங்கள் செயல்படுகிறோம். ஆகவே, அவர்கள் எந்த நேரத்திலும் எங்களை அணுகலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News