செய்திகள்
உத்தவ் தாக்கரே, சரத்பவார்

சிவசேனா கூட்டணி அரசில் மந்திரிகள் அதிருப்தி?: உத்தவ் தாக்கரே, சரத்பவார் திடீர் சந்திப்பு

Published On 2020-07-04 04:03 GMT   |   Update On 2020-07-04 04:03 GMT
சிவசேனா கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மந்திரிகள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், திடீரென முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும், சரத்பவாரும் சந்தித்து பேசினார்கள்.
மும்பை :

மகாராஷ்டிராவில் வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் அவ்வப்போது உரசல் ஏற்பட்டு வருகிறது. கொரோனா நிலைமை மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும், சரத்பவாரும் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதன் மூலம் கூட்டணி ஆட்சியில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் இருந்து காங்கிரஸ் புறக்கணிக்கப்படுவதாக அக்கட்சியினர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். பின்னர் இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களான மந்திரிகள் பாலசாகேப் தோரட், அசோக் சவான் ஆகியோர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசியதுடன், கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என்று தெரிவித்தனர்.

தற்போது, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூட்டணி கட்சிகளிடம் கலந்தாலோசிக்காமல் முடிவுகளை எடுப்பதாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் மந்திரிகள் அதிருப்தியில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இருவரும் திடீரென சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது. இந்த சந்திப்பின் போது, இரு தலைவர்களும் மாநிலத்தின் தற்போதைய நடப்பு விவகாரங்கள், கொரோனா பிரச்சினை தொடர்பாக விவாதித்ததாகவும், கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News