செய்திகள்
கதக்கில் தந்தையை இழந்த மாணவிக்கு பள்ளியின் முதல்வர் ஆறுதல் கூறியதை காணலாம்.

தந்தை, தாயை இழந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவிகள்

Published On 2020-07-04 03:08 GMT   |   Update On 2020-07-04 03:08 GMT
கதக், மைசூருவில் தந்தை, தாயை இழந்த நிலையில் துக்கத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை இரு மாணவிகள் எழுதிய உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.
கதக் :

கர்நாடகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்தப்பட இருந்தது. ஆனால் கொரோனா பரவலை தொடர்ந்து தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. அண்டை மாநிலமான தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஜூன்) 25-ந்தேதி திட்டமிட்டப்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. தேர்வு தொடங்கிய நிலையில் 6-க்கும் மேற்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் நேற்று தாய், தந்தையை இழந்த மாணவிகள் 2 பேர் துக்கத்திற்கு மத்தியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய உருக்கமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன் விவரம் வருமாறு:

கதக் (மாவட்டம்) டவுனை சேர்ந்தவர் சுரேஷ் பஜாந்திரி (வயது 50). இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இவரது மகள் அனுஷா (15) அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். தற்போது தேர்வு நடைபெற்று வருவதால் அனுஷா தேர்வுக்காக இரவு-பகலாக படித்து வந்தார்.

இந்த நிலையில் அனுஷாவின் தந்தை சுரேஷ் பஜாந்திரி உடல் நலக்குறைவால் நேற்று காலை திடீரென்று உயிரிழந்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தினரும், மகள் அனுஷாவும் துக்கம் தாளாமல் கண்ணீர்விட்டு அழுதபடி இருந்தனர். நேற்று நடந்த 3-ம் மொழி பாடத் தேர்வை எழுத செல்வதா? என்ற குழப்பத்தில் அனுஷா எதிர்கால வாழ்க்கையை நினைத்தும் மிகுந்த சோகத்தில் இருந்தார்.

மேலும் அவர் தேர்வு எழுத செல்லவில்லை என்றும் கூறியதாகவும், தந்தை இறுதிச்சடங்கு நடந்த பிறகே தேர்வு எழுத செல்வதாகவும் கூறினார். இதை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் நீ தேர்வு எழுதிவிட்டு வந்த பிறகே தந்தையின் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்றும் குடும்பத்தினரும், உறவினர்களும் அனுஷாவிடம் கூறினர்.

அதைதொடர்ந்து அனுஷாவை அவரது வீட்டுக்கே அவர் படித்து வரும் பள்ளியின் முதல்வரும், ஊழியர்களும் சென்று ஒரு வாகனத்தில் சென்று தேர்வு மையத்திற்கு அழைத்து வந்தனர். ஆனால் தந்தையை இழந்த அனுஷா தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பு துக்கத்தில் கதறி அழுதார். அவரை பள்ளி முதல்வரும், ஊழியர்களும் சமாதானப்படுத்தி, ஆறுதல் கூறி தேர்வு எழுத அனுப்பினர். அவரும் துக்கத்திலும் தேர்வை எழுதினார். பின்னர் அவர் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார்.

இதுபோல் மைசூரு அருகே பிரிகுந்தி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமம்மா. இவரது மகள் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த லட்சுமம்மா நேற்று முன்தினம் மரணமடைந்தார். இதனால் அவரது மகள் துக்கத்தில் இருந்து வருகிறார்.

இதற்கு மத்தியில் நேற்று லட்சுமம்மாவின் மகள் மைசூரு டவுன் ரூபா நகரில் உள்ள தேர்வு மையத்தில் எஸ்.எஸ்.எல்.சி. 3-வது மொழி பாடத் தேர்வை எழுதினார். அந்த மாணவியை கிராமத் தலைவரான சிவண்ணா தனது வாகனத்தில் அழைத்து வந்து இந்தி பாடத் தேர்வை எழுத வைத்தார். முன்னதாக அந்த மாணவி தேர்வு அறை முன்பு அழுதபடி இருந்தார். அவரை அவரது தோழிகள் ஆறுதல் கூறி தேர்வு அறைக்கு அழைத்துச் சென்றனர். தாய், தந்தையை இழந்த நிலையில் மாணவிகள் 2 பேர் துக்கத்திலும் தேர்வு எழுதிய சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
Tags:    

Similar News