செய்திகள்
படைவீரரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி

லே பகுதியில் சிகிச்சை பெறும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

Published On 2020-07-03 11:59 GMT   |   Update On 2020-07-03 11:59 GMT
இந்தியா-சீன எல்லையான லடாக்கின் லே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராணுவ வீரர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
புதுடெல்லி:

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு, காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியானது. இதையடுத்து, இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையே, மோதல் நடந்த பகுதியில் இந்திய பிரதமர் மோடி இன்று திடீரென ஆய்வு செய்தார். லடாக்கில் உள்ள லே பகுதிக்கு பயணம் மேற்கொண்ட அவர், அங்கிருந்து விமானத்தில் பறந்தபடி, எல்லையில் உள்ள  நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்தார். அவருடன் முப்படை தளபதி பிபின் ராவத்தும் சென்றிருந்தார். 

அதன்பின், நிம்முவில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், இந்திய ராணுவ வீரர்களின் மன உறுதி மலையைப் போல பலமாக இருக்கிறது. நீங்கள் நாட்டின் எதிரிகளுக்கு உரிய பாடம் புகட்டி உள்ளீர்கள் என பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில், லே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.

சீனாவுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Tags:    

Similar News