செய்திகள்
கோவேக்சின் மருந்து

கொரோனா தடுப்பூசி பரிசோதனை முடிவுகளை ஆகஸ்ட் 15-க்குள் வெளியிட ஐசிஎம்ஆர் திட்டம்

Published On 2020-07-03 07:25 GMT   |   Update On 2020-07-03 07:25 GMT
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான, கோவேக்சின் மருந்தை நோயாளிகளுக்கு செலுத்தி கண்காணிக்கும் பரிசோதனைகளை விரைவில் செய்து முடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. 

அவ்வகையில் இந்தியாவின் புனேயை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்த COVAXIN என்ற தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்தது. தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இந்த மாதம் நாடு முழுவதும் உள்ள 12 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை நடைபெற உள்ளது.

இந்த பரிசோதனைகளை விரைவில் முடித்து ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதற்கு ஐசிஎம்ஆர் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பாரத் பயோடெக் மற்றும் பரிசோதனை நடைபெறும் மருத்துவக் கல்லூரிகளின் முதன்மை ஆய்வாளர்களுக்கு ஐசிஎம்ஆர் பொது இயக்குனர் பல்ராம் பார்கவா கடிதம் அனுப்பி உள்ளார். 

அதில், கொரோனா தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள பொது சுகாதார அவசரத்தை கருத்தில் கொண்டு, தடுப்பூசியை அறிமுகம் செய்வதற்கு, மருத்துவ பரிசோதனையை விரைவில் தொடங்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அதிகபட்ச முன்னுரிமை கொடுத்து, கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் எந்தவித குறைபாடும் இல்லாமல் சோதனையை முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக ஆகஸ்ட் மாதத்திற்குள் தடுப்பூசி தயாராகும் என்று கூறி, ஐ.சி.எம்.ஆர் பொது இயக்குனர் பாரத் பயோடெக்கிற்கு எழுதிய கடிதம் கசிந்தது கவனிக்கத்தக்கது. இதுபற்றி கேட்டபோது, ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முடிவுகள் கிடைக்கக்கூடிய வகையில் சோதனைகளை விரைவுபடுத்துவதே இந்த கடிதத்தின் நோக்கம் என்றும், தடுப்பூசி பொது பயன்பாட்டிற்கு வருவதற்கு அதிக காலம் ஆகும் என்றும் ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்தது.

இதேபோல் மற்றொரு இந்திய நிறுவனமான ஸைடஸ் கண்டுபிடித்தள்ள மருந்தும் இந்த மாதம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News