செய்திகள்
சித்தராமையா

சமுதாயத்தில் மத விஷ விதைகளை விதைக்கும் பிரதமர் மோடி: சித்தராமையா

Published On 2020-07-03 03:54 GMT   |   Update On 2020-07-03 03:54 GMT
சமுதாயத்தில் பிரதமர் மோடி மத விஷ விதைகளை விதைக்கிறார் என்று சித்தராமையா கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் நேற்று பதவி ஏற்றார். இந்த விழாவில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

பா.ஜனதா கட்சியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் இயக்குகிறது. அந்த அமைப்பின் திட்டங்களை தான் பிரதமர் மோடி செயல்படுத்துகிறார். கொரோனாவை தடுப்பதில் பிரதமர் மோடி தோல்வி அடைந்துவிட்டார். ஊரடங்கை அமல்படுத்தியபோது, ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தற்போது அமல்படுத்த வேண்டிய ஊரடங்கை முன்பு எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் மோடி செயல்படுத்தினார். மக்களுக்கு தேவையான உதவிகளை பிரதமர் செய்யவில்லை. மாறாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதில் இருந்து கடந்த 6 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ரூ.18 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த நிதியை கொண்டு ஏழை மக்களுக்கு திட்டங்களை அமல்படுத்துவதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் சொல்கிறார்.

பிரதமர் மோடி மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை கொடுப்பதிலேயே காலத்தை கழிக்கிறார். இவ்வளவு பொய் பேசும் பிரதமரை நான் பார்த்ததே இல்லை. நாட்டில் கொரோனா பரவலுக்கு தப்லிக் ஜமாத் அமைப்பினரே காரணம் என்று தொடக்கத்தில் குற்றம்சாட்டினர். அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இந்த தப்லிக் ஜமாத்தினர் இருக்கிறார்களா?.

அரசியல் அமைப்புக்கு எதிராக சமுதாயத்தில் மத விஷ விதைகளை விதைக்கும் மோடி, பிரதமராக இருக்க தகுதியற்றவர். முதல்-மந்திரி எடியூரப்பா பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வந்துள்ளார். அவருக்கு மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் ஆபரேஷன் தாமரை மூலம் ஆட்சியை பிடித்துள்ளார்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Tags:    

Similar News