செய்திகள்
புதின் - மோடி

ரஷிய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

Published On 2020-07-02 21:30 GMT   |   Update On 2020-07-02 21:30 GMT
விளாடிமிர் புதின் ரஷியாவின் அதிபராக 2036 ஆம் ஆண்டு வரை நீடிக்க வகைசெய்யும் சட்டத்திற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ரஷியாவின் அதிபராக உள்ள புதின் 2024 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளில் நடைபெறும் அதிபர் தேர்தல்களில் பங்கு பெற வகை செய்யும் அரசியலைமைப்பு திருத்தத்திற்கு அந்நாட்டு மக்களிடம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 77 சதவிகித வாக்காளர்கள் அரசியல் அமைப்பில் திருத்தம் செய்ய ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் புதின் அடுத்த இரண்டு அதிபர் தேர்தல்களிலும் போட்டியிடலாம்.  அந்த தேர்தல்களில் வெற்றிபெறும் பட்சத்தில் 2036-ம் ஆண்டுவரை அதாவது தனது 83 வயது வரை ரஷியாவின் அதிபராக விளாடிமிர் புதின் செயல்படுவார்.

இந்த வாக்கெடுப்பின் மூலம், அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக நடைபெற்ற தேர்தலில் மக்கள் புதினுக்கு ஆதரவு அளித்துள்ளனர். 

இந்நிலையில், தொடர்ந்து அதிபர் தேர்தலில் போட்டியிடும் வகையிலான சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தலில் புதின் வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலம் ரஷிய அதிபரை தொடர்பு கொண்ட இந்திய பிரதமர் மோடி அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான தேர்தலில் புதின் வெற்றிபெற்றதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 

பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நன்றி தெரிவித்தார். மேலும், இரு நாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என இரு நாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரு நாட்டு தலைவர்களும் கொரோனா வைரஸ் தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News