செய்திகள்
பாஜக கொடி

வலிமையான அரசு அமைந்திருப்பதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை: பாஜக கடும் தாக்கு

Published On 2020-06-30 03:33 GMT   |   Update On 2020-06-30 03:33 GMT
மத்தியில் ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயக்க முடியாத வலிமையான அரசு அமைந்திருப்பதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை என பா.ஜனதா கூறியுள்ளது.
புதுடெல்லி :

லடாக்கில் இந்திய-சீன படைகள் இடையே நடந்த மோதல் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே வார்த்தைப்போர் நடந்து வருகிறது. இதைப்போல நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் கொரோனா பரவலை மத்திய அரசு கையாளும் விதங்கள் தொடர்பாகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது.

காங்கிரசின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பா.ஜனதா தலைவர்களும், மத்திய மந்திரிகளும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரியுமான முக்தர் அப்பாஸ் நக்வியும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார்.

உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் பன்னோக்கு சமூக மையத்துக்கு அடிக்கல் நாட்டிவிட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகளை பார்க்கும்போது, ‘வெற்றுப்பாத்திரம் அதிக கூச்சலிடும்’ என்ற பழமொழிதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் தாங்கள் அதிகம் கற்றவர்கள் என்று நிரூபிக்கும் முயற்சியில், தங்கள் சொந்த கட்சியையே அழிக்கிறார்கள்.

அவர்கள் இன்னும் நிலபிரபுத்துவ மனப்பான்மை மற்றும் அதிகார ஆணவத்திலேயே இருக்கிறார்கள். ஒருவரின் இயற்கையை மற்றவரால் மாற்ற முடியாது. அதற்கு எவ்வளவு நேரம் செலவிட்டாலும் பயனில்லை.

தங்கள் குறுகிய மனப்பான்மை அறிவைக்கொண்டு நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், ஏழைகள் நல்வாழ்வு, விவசாயிகள் நலன் போன்றவற்றில் எங்களுக்கு உத்தரவுகள் போடுவதற்கு முயற்சிக்கிறார்கள்.

தங்கள் ஆட்சியில் இருந்தது போல ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயக்க முடியாத ஒரு வலிமையான மோடி அரசு மத்தியில் இன்று அமைந்திருப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

நாட்டின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் வளர்ச்சிக்காக மோடி தலைமையிலான அரசு தங்களை அர்ப்பணித்திருக்கிறது. பொருளாதாரம், பாதுகாப்பு அல்லது எல்லை விவகாரத்தில் மோடி அரசு புதிய சாதனை வளர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. நாட்டுக்கே முதலிடம் என்பதே மோடி அரசின் மந்திரம் ஆகும்.

பிரதான் மந்திரி ஜன விகாஸ் கார்யக்கிரமம் திட்டத்தின் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் பின்தங்கிய பகுதிகளில் சமூக-பொருளாதார கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த உள்கட்டமைப்புகளை மோடி அரசு மேம்படுத்தி இருக்கிறது. இதைப்போல உத்தரபிரதேச அரசும் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 
Tags:    

Similar News