செய்திகள்
ஓட்டுனர் உரிமம்

நிறக்குருடு உள்ளவர்களுக்கும் இனி ஓட்டுனர் உரிமம் - மத்திய அரசு தகவல்

Published On 2020-06-27 12:28 GMT   |   Update On 2020-06-27 12:28 GMT
நிறக்குருடு உள்ளவர்களுக்கும் இனி ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

பார்வை குறைபாட்டில் பல்வேறு வகைகள் உள்ளன. இதில் நிறக்குருடும் ஒன்று. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு நிறங்கள் சரிவர தெரியாது. இதனால் இத்தகைய குறைபாடு உள்ளவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற முடியாத நிலை இருந்தது.

ஆனால் உலகில் பல நாடுகளில், நிறக்குருடு உள்ளவர்களுக்கும் ஒட்டுனர் உரிமம் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி இந்தியாவிலும் அது போல வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுபற்றி மருத்துவ நிபுணர்களிடம் மத்திய அரசு ஆலோசனை கேட்டது.

நிறக்குருடு உள்ளவர்களால் நிறங்களை மட்டும் அடையாளம் காண முடியாதே தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளையும் சரியாக செய்ய முடியும். எனவே, குறிப்பிட்ட அளவிலான நிறக்குருடு உள்ளவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கலாம் என்று அவர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் உள்பட வாகன போக்குவரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கருத்து கேட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 15- ந் தேதி வரை ஆன்லைனில் ஏராளமானோர், நிறக்குருடு உள்ளவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

பொதுமக்களின் பெரும்பாலான கருத்துக்களின் அடிப்படையில் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நிறக்குருடு உள்ளவர்களுக்கு சாதகமான ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. லேசான மற்றும் நடுத்தர அளவில் நிறக்குருடு உள்ளவர்களுக்கு ஒட்டுனர் உரிமம் வழங்குவதற்காக மோட்டார்வாகன விதிகளில் திருத்தம் செய்யப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News