செய்திகள்
உத்தவ் தாக்கரே

தொழில்முறை படிப்பு: இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய பிரதமருக்கு உத்தவ் தாக்கரே கடிதம்

Published On 2020-06-27 03:31 GMT   |   Update On 2020-06-27 03:31 GMT
தொழில்முறை படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.
மும்பை :

மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தற்போதைய கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மாநில பேரிடர் கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த 18-ந்தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் தொழில்முறை அல்லாத மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கான இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என முடிவு செய்தது. அதே நேரத்தில் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

தொழில்முறை படிப்புகளின் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பான மாநில அரசின் முடிவை அங்கீகரிக்கவும், இதுதொடர்பாக பல்கலைக்கழகங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும் இந்த படிப்புகளுக்கு தேசிய அளவிலான உச்ச அமைப்புகளான அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், கட்டிடக்கலை கவுன்சில், இந்திய மருந்தியல் கவுன்சில், இந்திய பார் கவுன்சில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், ஓட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப தேசிய கவுன்சில் ஆகியவற்றை அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் தற்போதுள்ள கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இந்த கல்வி ஆண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் மற்றும் அடுத்த கல்வி ஆண்டு குறித்து மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் கவலை உள்ளது. கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலை கல்வி நிறுவனங்களில் தேர்வுகள் மற்றும் வகுப்புகளை நடத்துவதற்கு உகந்ததல்ல. தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக ஒரே மாதிரியான வழிகாட்டுதல்களை கொண்டிருப்பது காலத்தின் தேவை. தொற்றுநோய் உயர்கல்வியை தொடரும் மாணவர்களுக்கு பல சவால்களை உருவாக்கியுள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News