செய்திகள்
காலால் தேர்வை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் கவுசிக்.

காலால் தேர்வு எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்: மந்திரி சுரேஷ்குமார் பாராட்டு

Published On 2020-06-27 03:12 GMT   |   Update On 2020-06-27 03:12 GMT
கை இல்லாவிட்டாலும் யாருடைய உதவியும் இன்றி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாணவர் ஒருவர் காலால் எழுதி உள்ளார். அந்த மாணவருக்கு மந்திரி சுரேஷ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவமாடி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாநில அரசு நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. இந்த நிலையில், ஒரு கை இல்லாவிட்டாலும் யாருடைய உதவியும் இன்றி மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், காலால் தேர்வை எழுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் டவுன் கஞ்சிகரா பேட்டே பகுதியை சேர்ந்த ராஜேஷ்-ஜலஜாக்‌ஷி ஆச்சார்யா தம்பதியின் மகன் கவுசிக். இவர் அங்குள்ள எஸ்.வி.எஸ். பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். கவுசிக்கிற்கு பிறவியிலேயே ஒரு கை கிடையாது. மற்றொரு கையும் ஊனமாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தொடங்கிய தேர்வில், கவுசிக்கிற்கு எஸ்.வி.எஸ். பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த தேர்வு மையத்தில், யாருடைய உதவியும் இன்றி மாணவர் கவுசிக் தனது காலால் தேர்வை எழுதியுள்ளார். அவர் தரையில் அமர்ந்து தேர்வு எழுதும் படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த மாணவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமாரும் அந்த மாணவரை வெகுவாக பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பண்ட்வால் எஸ்.வி.எஸ். பள்ளியில் மாணவர் ஒருவர் கை இல்லாவிட்டாலும் யாருடைய உதவியும் இல்லாமல் காலால் தேர்வு எழுதியது என் இதயத்தை கணக்க வைத்தது. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டை தெரிவித்து கொள்கிறேன். அந்த மாணவரை போன்றவர்கள் தான் வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறார்கள்’ என்று பதிவிட்டு இருந்தார்.

மாற்றுத்திறனாளியான மாணவர் கவுசிக், நடனம், ஓவியம் வரைதல், நீச்சல் போட்டி, கிரிக்கெட் போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News