செய்திகள்
குமாரசாமி

கர்நாடகத்தில் மீண்டும் 20 நாட்கள் முழு ஊரடங்கு: குமாரசாமி வலியுறுத்தல்

Published On 2020-06-24 03:35 GMT   |   Update On 2020-06-24 03:35 GMT
கர்நாடகத்தில் மீண்டும் 20 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்றும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் அரசு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சில பகுதிகளை மட்டும் சீல் வைத்துள்ளது. இதனால் எந்த பயனும் இல்லை. பெங்களூரு மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால், கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் மீண்டும் முழு ஊரடங்கை 20 நாட்களுக்கு அமல்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் பெங்களூரு நகரம், இன்னொரு பிரேசில் ஆக மாறும். இந்த அரசு நிலைகுலைந்து போய் உள்ள பொருளாதாரத்தை சரிசெய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது. மக்களின் உயிரைவிட பொருளாதாரத்தை சீர்செய்வது முக்கியம் அல்ல. ஏழை மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும்.

50 லட்சம் உழைக்கும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.5,000 உதவித்தொகை வழங்க வேண்டும். நெசவாளர்கள், ஆட்டோ-டாக்சி டிரைவர்களுக்கு அறிவித்த உதவித்தொகையை இந்த அரசு இன்னும் வழங்கவில்லை. வெறும் தொகுப்புகளை அறிவித்தால் போதாது. அதை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுப்பை அறிவித்துவிட்டு, வெறுங்கையில் அரண்மனையை காட்டக்கூடாது.

கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. நமது நாட்டில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால், கொரோனா அதிகரித்து வருகிறது. ஊரடங்கு தளர்வால், கொரோனா பாதிப்பு அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பில் நாம் பிரேசில் நாட்டை முந்த வேண்டுமா?.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை மட்டும் சீல் வைக்கிறார்கள். இதனால் கொரோனா பரவலை தடுக்க முடியாது. அதனால் மீண்டும் 20 நாட்கள் தேசிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த பிரதமர் முடிவு எடுக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பை பின்னுக்கு தள்ளி பொருளாதாரத்தை மீட்டெடுப்பது சரியல்ல.

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 25-ந் தேதி(நாளை) தொடங்குகிறது. இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது அக்டோபர் மாதம் வரை தேர்வை ஒத்திவைக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதை கர்நாடக அரசு யோசித்து பார்க்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவது சரியல்ல.

தேர்வு எழுதும் மணவர்கள் 8.50 லட்சம் உள்பட, தேர்வு பணியில் ஈடுபடுவோர், மாணவர்களின் பெற்றோர் என மொத்தம் 24 லட்சம் பேர் தேர்வு மையங்களுக்கு வருவார்கள். மாணவர்களின் உயிரோடு இந்த அரசு விளையாடுகிறது. இந்த கொரோனா வைரஸ், சமுதாயத்திற்குள் பரவும் கட்டத்தில் உள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு பள்ளி கல்வித்துறை மந்திரி மற்றும் மாநில அரசே முழு பொறுப்பு. இந்த விஷயத்தில் மாநில அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்.”

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News