செய்திகள்
ராகுல் காந்தி

ராணுவத்தின் நம்பிக்கையை அழிக்கும் செயலில் ராகுல் காந்தி ஈடுபடுகிறார் - சிவராஜ் சிங் சவுகான்

Published On 2020-06-23 12:45 GMT   |   Update On 2020-06-23 12:45 GMT
இந்திய ராணுவத்தின் நம்பிக்கையை அழிக்கும் மற்றும் புண்படுத்தும் செயலில் ராகுல் காந்தி ஈடுபடுகிறார் என சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
போபால்:

இந்தியா மற்றும் சீன ராணுவத்துக்கு இடையே கடந்த வாரம் திங்கட்கிழமை கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர் என செய்திகள் வெளிவந்தன.  எனினும் இதுபற்றி சீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை. சீனா திட்டமிட்டு இந்திய ராணுவ வீரர்களை கொலை செய்துள்ளது என குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் இந்திய நிலப்பகுதியை சீன ஆக்கிரமிப்பிற்கு ஒப்படைத்து விட்டார். அந்த நிலப்பகுதி சீனாவுடையது என்றால் நம் வீரர்கள் ஏன் கொல்லப்பட வேண்டும்? அவர்கள் எங்கு கொல்லப்பட்டார்கள்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், சீனாவின் ஆவேசமான போக்கை தடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. 2வது முறையாக சீனா இந்தியாவின் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இனிமேலாவது இந்தியா தனது கொள்கையை மாற்றுமா என ஜப்பான் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டிருந்த செய்தியை டுவிட்டரில் பகிர்ந்த ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி” என்று விமர்சனம் செய்துள்ளார். இதனால் பா.ஜ.க. மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய ராணுவத்தின் நம்பிக்கையை அழிக்கும் மற்றும் புண்படுத்தும் செயலில் ராகுல் காந்தி ஈடுபடுகிறார்.  கடந்த காலங்களில் கடினமான நேரங்களில் காங்கிரசுக்கு ஆதரவாக பா.ஜ.க. இருந்து வந்துள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சி தூய்மையற்ற அரசியலை செய்து வருகிறது. அவர்கள் சீனாவைத் தாக்கி பேசவேண்டும்.  ஆனால் அவர்களுக்கு பிரதமர் மோடியை தவிர வேறு யாரும் கண்ணுக்கு தெரியவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
Tags:    

Similar News