செய்திகள்
ஆக்சிமீட்டர்

வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு ஆக்சிமீட்டர்கள் வழங்கப்படும் -அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

Published On 2020-06-22 10:19 GMT   |   Update On 2020-06-22 10:19 GMT
டெல்லியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்களின் ஆக்ஸிஜன் அளவை அளவிடுவதற்காக அவர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் வழங்கப்பட உள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் பரிசோதனைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதுவரை 59746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2175 பேர் உயிரிழந்துள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கை வசதிகளும் அதிகரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் அளித்த பேட்டி வருமாறு:-

சீனாவுடனான எல்லை பிரச்னை மற்றும் சீனாவில் இருந்து பரவிய வைரஸ் என 2 போர்களில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்த இரண்டு போர்களிலும் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவற்றை அரசியல்மயமாக்கக்கூடாது.



டெல்லியில் கொரோனா பரிசோதனைகள் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தினமும் 5000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இப்போது தினமும் 18000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்கள், குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு ஒருமுறை ஆக்ஸிஜன் அளவை அளவிடுவதற்காக அவர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் வழங்கப்படும். நோயாளிகள் நலமான பின்னர், அதை அரசாங்கத்திற்கு திருப்பித் தரவேண்டும். சுமார் 12000 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News