செய்திகள்
எல்லையில் அணிவகுப்பில் ஈடுபடும் வீரர்கள்

லடாக் எல்லைப் பிரச்சினை: இந்தியா, சீன கமாண்டர்கள் பேச்சுவார்த்தை

Published On 2020-06-22 08:01 GMT   |   Update On 2020-06-22 08:01 GMT
இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளின் கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை கடந்த சில மாதங்களாக தீவிரமடைந்துள்ளது. லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகளும் குவிக்கப்பட்டதால் பதற்றம் உருவானது. பின்னர் இரு தரப்பும் படைகளை திரும்ப அழைக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடந்த திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, இரு தரப்பு படைகளுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீனா தரப்பில் 43 பேர் வரை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் மேலும் அதிகரித்ததது. போரை எதிர்கொள்ளும் அளவிற்கு படைகள் தயார்படுத்தப்பட்டன. அதேசமயம் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவு எட்டப்படாத நிலையில், இன்று இருநாட்டு ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சீனாவின் மால்டோ பகுதியில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. லடாக் பிரச்சினை தொடர்பாகவும் எல்லையில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. 

ஜூன் 6ம் தேதிக்குப் பிறகு இரு நாடுகளின் படைப்பிரிவு கமாண்டர்களுக்கிடையேயான இரண்டாவது பேச்சுவார்த்தை இதுவாகும். 6ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது பல இடங்களில் படைகளை திரும்ப பெறுவதற்கு ஒப்புக் கொண்டனர். மேலும் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) பகுதியில் மே 4-க்கு முந்தைய ராணுவ நிலைகளுக்குச் செல்லுமாறு இந்தியா கேட்டுக் கொண்டது. 

இதற்கு சீனா தரப்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை. மேலும், பின்புற நிலைகளில் இருந்துகூட தனது வீரர்களை திரும்பப் பெறுவதற்கு முன்வரவில்லை. 

எனவே, அசாதாரண சூழ்நிலைகளில், துப்பாக்கிகளைப் பயன்படுத்த படைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்ட எல்.ஏ.சி விதிமுறைகளில் மாற்றம் செய்யவேண்டும் என்பது குறித்து இந்தியா இன்று விவாதிக்கலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News