செய்திகள்
நிலநடுக்கத்தினால் வீட்டில் ஏற்பட்ட விரிசல்

மிசோரம் மாநிலத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்- தேவையான உதவிகள் செய்வதாக பிரதமர், உள்துறை மந்திரி உறுதி

Published On 2020-06-22 07:25 GMT   |   Update On 2020-06-22 07:25 GMT
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மிசோரம் மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக முதல்வரிடம் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.
ஐசால்:

மிசோரம் மாநிலத்தில் கடந்த 12 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை தலைநகர் ஐசாலில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் இன்று அதிகாலை 4.10 மணியளவில் சம்பாய் நகரில் இருந்து 27 கிமீ தொலைவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இதில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ஆனால், நிலநடுக்கம் உணரப்பட்டதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.



நிலநடுக்கம் குறித்து கேள்விப்பட்டதும், பிரதமர் மோடி தொலைபேசி மூலம் மிசோரம் முதல்வர் சோரம்தங்காவை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது நிலைமையை ஆராய்ந்து, மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என்று உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் மிசோரம் மாநில மக்களின் பாதுகாப்புக்காக பிரார்த்தனை செய்வதாக உள்துறை மந்திரி அமித் ஷா பதிவிட்டுள்ளார். மேலும், முதல்வரை தொடர்பு கொண்டும் பேசி உள்ளார்.

இந்த நிலநடுக்கம் குறித்து பேசிய முதல்வர் சோரம்தங்கா, ‘12 மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. பாதிப்பு தொடர்பாக அந்தந்த பகுதி எம்எல்ஏ மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்த பிரதமர் மற்றும் உள்துறை மந்திரிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
Tags:    

Similar News