செய்திகள்
எடியூரப்பா

மக்களை தோழமை உணர்வுடன் போலீசார் அணுக வேண்டும்: எடியூரப்பா

Published On 2020-06-20 03:35 GMT   |   Update On 2020-06-20 03:35 GMT
போலீசார் மக்களை தோழமை உணர்வுடன் அணுக வேண்டும். குற்றம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு :

பெங்களூருவில் கட்டப்பட்டுள்ள போலீஸ் குடியிருப்பு கட்டிடம், போக்குவரத்து போலீஸ் நிலைய கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா விதான சவுதாவில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் அந்த கட்டிடங்களை திறந்து வைத்து பேசும்போது கூறியதாவது:-

போலீசாரின் உடல்நிலையை பாதுகாப்பது அரசின் பொறுப்பு. போலீசாருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அனைத்து ரீதியான பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும். போலீசார், மக்களை தோழமை உணர்வுடன் அணுக வேண்டும். குற்றம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும். கொரோனாவை தடுக்கும் பணியில் போலீசார் தங்களின் உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிறார்கள்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு போலீசார் உதவி செய்து இருக்கிறார்கள். போலீசாருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது. போலீசாருக்கு தரமான வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன. பெங்களூருவில் இன்று 450 குடியிருப்பு கட்டிடங்களை திறந்து வைத்துள்ளேன்.

மீதியுள்ள கட்டிட கட்டுமான பணிகளும் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாருக்கு பணி மூப்பு அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. போலீஸ் படைக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க இந்த வயர்லெஸ் பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த விழாவில் பெண் போலீஸ் ஒருவருக்கு வீட்டு சாவியை எடியூரப்பா வழங்கினார். இந்த விழாவில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News