செய்திகள்
சித்தராமையா

இந்திய-சீன எல்லையில் மோதல்: பிரதமர் மோடி மவுனம் காப்பது சரியல்ல- சித்தராமையா

Published On 2020-06-19 03:56 GMT   |   Update On 2020-06-19 03:56 GMT
இந்திய-சீன எல்லையில் நடக்கும் மோதல் குறித்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது சரியல்ல என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எம்.எல்.ஏ.க்கள் பலர் காணொலி கட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது:-

சீனா நடத்திய தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகம், என்றென்றும் நினைவில் இருக்கும். நமது ராணுவம் பெரிய அளவுக்கு பலம் வாய்ந்தவை. ஆனால் எல்லையில் நடைபெற்று வரும் மோதல் சம்பவம் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது சரியல்ல.

நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது வரும் நாட்களில் கருப்பு சட்டமாக இருக்கப்போகிறது. காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே, நில உரிமையாளர்களை பாதுகாத்து வந்துள்ளது. கர்நாடக அரசின் நில சீர்திருத்த சட்ட திருத்தத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தயாராக வேண்டும்.

பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலையை ரூ.25 முதல் ரூ.30 ஆக நிர்ணயிக்க வேண்டும். ஆனால் எரிபொருள் விலையை உயர்த்தி நடுத்தர மக்களுக்கு மத்திய அரசு அநீதி இழைக்கிறது.

மத்திய அரசு மக்கள் விரோத கொள்கைகளை அனுசரிக்கிறது. பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் சீரழிக்க புறப்பட்டுள்ளார். மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.

டி.கே.சிவக்குமார் வருகிற 2-ந் தேதி மாநில தலைவராக பதவி ஏற்கிறார். இந்த விழா மாநிலம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை எம்.எல்.ஏ.க்கள் செய்ய வேண்டும். மேல்-சபை தேர்தலில் போட்டியிட நசீர்அகமது மற்றும் பி.கே.ஹரிபிரசாத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தேர்ந்தெடுத்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Tags:    

Similar News