செய்திகள்
பாலசாகேப் தோரட்

சிவசேனா பத்திரிகை காங்கிரசை பற்றி தவறான கருத்தை கொண்டு சேர்க்கிறது: பாலசாகேப் தோரட்

Published On 2020-06-17 03:45 GMT   |   Update On 2020-06-17 03:45 GMT
சிவசேனா பத்திரிகையான சாம்னா காங்கிரசை பற்றி முழுமை இல்லாத தகவலால் எங்களை பற்றி தவறான கருத்தை கொண்டு சேர்க்கிறது என பாலசாகேப் தோரட் குற்றம் சாட்டி உள்ளார்.
மும்பை :

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்த மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி ஆட்சியில் காங்கிரசுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என காங்கிரஸ் மாநில தலைவர் பாலசாகேப் தோரட், மந்திரி அசோக் சவான் ஆகியோர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினர். முக்கிய பிரச்சினைகளில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் மட்டும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்துவதாக அவர்கள் இந்த ஆதங்கத்தை வெளியிட்டு உள்ளனர்.

இந்தநிலையில் காங்கிரஸ் குறித்து சிவசேனாவின் சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இடம் மாறக்கூடிய பலர் அந்த கட்சியில் உள்ளனர். இதனால் சலசலப்பு இருப்பதை நம்மால் உணரமுடிகிறது. கூட்டணியில் இதுபோன்ற சலசலப்புகளை சகித்து கொள்ள முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தயாராக இருக்க வேண்டும். ஏன் இந்த சலசலப்பு?. காங்கிரஸ் மந்திரிகள் அசோக் சவான், பாலசாகேப் தோரட்டுக்கு ஆட்சியில் அதிக அனுபவம் உள்ளது. ஆனால் நிர்வாகத்தில் சரத்பவாருக்கு நீண்ட அனுபவம் உள்ளதை அவர்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். அந்த கட்சியில் (தேசியவாத காங்கிரஸ்) இருந்து எந்த புகார்களும் இல்லை. ஒட்டுமொத்த நிர்வாகமும், அரசு துறைகளும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றன. இருந்த போதிலும் உத்தவ் தாக்கரே அசோக் சவான், பாலசாகேப் தோரட்டின் குறைகளை கேட்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் மாநில தலைவரும், மந்திரியுமான பாலசாகேப் தோரட் கூறியதாவது:-

முதல்-மந்திரி தான் கூட்டணி அரசின் தலைவர். சாம்னா மற்றொரு தலையங்கத்தை எழுத வேண்டும். முழுமை இல்லாத தகவலால் எங்களை பற்றி தவறான கருத்தை கொண்டு சேர்க்கிறது. நாங்கள் மகாவிகாஸ் கூட்டணியுடன் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாம்னாவில் கவர்னர் ஒதுக்கீட்டில் நியமிக்கப்பட உள்ள 12 மேல்- சபை உறுப்பினர்கள், கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தை வைத்து முடிவு செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, மந்திரிகளின் எண்ணிக்கையை தான் மொத்த எம்.எல்.ஏ.க்களை வைத்து முடிவு செய்ய வேண்டும் என பாலசாகேப் தோரட் கூறினார்.
Tags:    

Similar News