செய்திகள்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

10-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

Published On 2020-06-16 05:40 GMT   |   Update On 2020-06-17 02:39 GMT
பத்தாவது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், விலை உயர்வை திரும்ப பெற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:

ஊரடங்கு உத்தரவு காரணமாக வாகன போக்குவரத்து முடங்கிது. அப்போது பெட்ரோல், டீசல் விற்பனை மிகவும் குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் விலையை நிர்ணயிக்கவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வாகனங்கள் அதிக அளவில் இயங்க தொடங்கிய நிலையில், கடந்த 7ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
 
அன்றைய தினம் பெட்ரோல் 53 காசுகளும், டீசல் 52 காசுகளும் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் தினந்தோறும் விலை உயர்த்தப்படுகிறது. அவ்வகையில் இன்று 10வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 பைசா உயர்ந்து 80 ரூபாய் 37 பைசாக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை லிட்டருக்கு 48 காசுகள் உயர்ந்து, 73 ரூபாய் 17 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாய் 83 பைசாவும், டீசல் 4 ரூபாய் 95 பைசாவும் உயர்ந்துள்ளன.



கடந்த 2018ம் ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்த போது விற்கப்பட்டதை விட, தற்போது பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை சந்தித்துள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறாத நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், விலை உயர்வை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தி  உள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என கூறி உள்ளார்.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துவதுடன் கூடுதல் சுமையையும் ஏற்படுத்துகிறது. ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கும் மக்களை மேலும் கஷ்டங்களுக்கு ஆளாக்காமல் அவர்களின் துயரத்தை தணிப்பது அரசாங்கத்தின் கடமை என்றும் சோனியா காந்தி கூறி உள்ளார்.
Tags:    

Similar News