செய்திகள்
இந்தியா - நேபாளம்

நேபாள வரைபடத்தில் மாற்றம் - இந்தியா கடும் கண்டனம்

Published On 2020-06-13 15:38 GMT   |   Update On 2020-06-13 15:38 GMT
இந்திய பகுதிகளை சேர்த்து தனது வரைபடத்தை நேபாளம் மாற்றி அமைத்துள்ளதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
காத்மாண்டு:

இந்திய பகுதிகளான காலாபாணி, லிம்பியாதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகள் தங்களுக்கு சொந்த பகுதி என்று கூறி வந்த நேபாளம், அந்த பகுதிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அந்த பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்திருப்பதாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்து வருகிறார்.

நேபாளம் வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த வரைபடத்துக்கு அந்நாட்டு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து வரைபடத்துக்கான அனுமதி மற்றும் அது தொடர்பான சட்டத்திருத்த மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.



ஆனால் வாக்கெடுப்பு நடக்கும் முன்பே பாராளுமன்றத்தில் இருந்து பல உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியதால் விவாதம் நடைபெறவில்லை. இந்த சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், திருத்தப்பட்ட வரைபடம் தொடர்பான சட்டத்திருத்த மசோதா மீது விவாதம் நடத்துவதற்காக பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதலில் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் முதலில் விவாதம் தொடங்கி காரசாரமாக நடைபெற்றது.

275 உறுப்பினர்கள் கொண்ட சபையில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் மசோதா நிறைவேறும் என்ற நிலையில் மசோதாவுக்கு ஆதரவாக 258 பேர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேறியது.

இதையடுத்து மேல் சபையான தேசிய சபைக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். அங்கும் இதேபோன்று விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். தேசிய சபையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும், அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டு சட்டமாக்கப்படும்.

நோபளம் அரசின் இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் வரைபடம் மாற்றம் பற்றி இந்தியா தனது நிலையை அதிகாரப்பூர்வமாக நேபாளத்திற்கு தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News