செய்திகள்
உத்தவ் தாக்கரே

ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: உத்தவ் தாக்கரே

Published On 2020-06-13 03:33 GMT   |   Update On 2020-06-13 03:33 GMT
மகாராஷ்டிராவில் ஊரடங்கை கடுமை ஆக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. வதந்திகளை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை :

மகாராஷ்டிராவில் தான் நாட்டின் மற்ற மாநிலங்களை விட கொரோனா வைரசால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவால் வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட கட் டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

கடந்த 31-ந்தேதி அன்று அன்லாக் 1 திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இதற்கு மறுநாள் மராட்டிய அரசு வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது. அதேநேரத்தில் மிஷன் பிகின் அகெய்ன் திட்டத்தின் கீழ் தளர்வுகளை அறிவித்தது.

இதன்படி மாநிலத்தில் வணிக வளாகங்கள் தவிர அனைத்து சந்தைகள், கடைகள் கடந்த 5-ந் தேதி முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன. மேலும் 8-ந்தேதி முதல் தனியார் அலுவலகங்கள் 10 சதவீத ஊழியர்களுடன் செயல்படவும் அனுமதிக்கப்பட்டது.

இந்தநிலையில், மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராததால் மாநில அரசு ஊரடங்கு தளர்வுகளை கடுமை ஆக்க முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சில தொலைக்காட்சி செய்தி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும், திறக்கப்பட்ட அனைத்து கடைகளும் மூடப்படும் என்று செய்திகள் வெளியிடுகின்றன. ஆனால் அத்தகைய முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை.

இதுபோன்ற செய்திகள் மக்களிடையே குழப்பத்தை உருவாக்குகின்றன. எந்த செய்தியையும் உண்மைதன்மை இல்லாமல் ஒளிபரப்ப கூடாது.

இதுபோன்ற செய்திகள் தவறான புரிதலை உருவாக்கும். வதந்திகளை பரப்பும் செய்திகளை ஒளிபரப்பு செய்வது சட்டப்படி குற்றமாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே முதல்-மந்திரி அலுவலக டுவிட்டர் பக்கத்தில், பொருளாதாரத்தை மேம்படுத்த ஊரடங்கை படிப்படியாக தளர்த்தி கொண்டு இருக்கிறோம். ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படவில்லை. மக்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News