செய்திகள்
ரவிசங்கர் பிரசாத்

லடாக் எல்லை பிரச்சினை பற்றிய கருத்து: ராகுல் காந்திக்கு ரவிசங்கர் பிரசாத் பதிலடி

Published On 2020-06-11 04:27 GMT   |   Update On 2020-06-11 04:27 GMT
லடாக் எல்லை பிரச்சினை தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரியும், பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்து உள்ளார்.
புதுடெல்லி :

லடாக் எல்லை பிரச்சினையில் மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசின் செயல்பாட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். லடாக்கில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் புகுந்து சில பகுதிகளை ஆக்கிரமித்து இருப்பதாகவும், ஆனால் இதுகுறித்து பிரதமர் மோடி எதுவும் கூறாமல் மவுனம் காத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

இதேபோல் மேலும் சில காங்கிரஸ் தலைவர்களும் மத்திய அரசை குற்றம்சாட்டி இருக்கின்றனர்.

காங்கிரசின் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு ஏற்கனவே மறுத்து உள்ளது. தனது எல்லையை பாதுகாக்கும் வலிமை இந்தியாவுக்கு இருப்பதாக உள்துறை மந்திரி அமித்ஷா கூறி உள்ளார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரியும், பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்து உள்ளார்.

இமாசலபிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் காணொலி காட்சி மூலம் பேசுகையில் கூறியதாவது:-

பகிரங்கமாக எழுப்புவது சரியா?

லடாக் எல்லை பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சில கேள்விகளை எழுப்பி உள்ளார். பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற பிரச்சினைகளை டுவிட்டரில் எழுப்பக்கூடாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். வெளிநாட்டு உறவு தொடர்பான பிரச்சினைகளில் இப்படி பகிரங்கமாக கேள்வி எழுப்புவது சரிதானா? என்பதை அவர் உணரவேண்டும்.

தற்சார்பை அடைவதற்காக இந்தியா பாடுபட்டு வருகிறது. நாட்டை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியதை குறிப்பிட விரும்புகிறேன்.

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளவே இந்தியா விரும்புகிறது. அதேசமயம் இப்போதைய 2020-ம் ஆண்டின் இந்தியா 1962-ல் இருந்த இந்தியா அல்ல என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். (1962-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின் போது சீனாவுடன் நடந்த போரில் இந்தியா தோல்வி அடைந்ததை குறிப்பிடும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.)

காங்கிரஸ் தலைவர்களை போல் அல்லாமல், இப்போது இந்தியாவுக்கு தைரியமிக்க நரேந்திரமோடி தலைவராக உள்ளார். இதை காங்கிரசார் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு உத்திகள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் எந்த அளவுக்கு புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இது விவாதத்துக்கு உரிய விஷயம். சீனாவுடன் தற்போது நிலவும் எல்லை பிரச்சினை பற்றி விவாதிக்க வேண்டும் என்றால், 1962-ம் ஆண்டு போரை அப்போதைய அரசு கையாண்ட விதம் குறித்தும் விவாதிக்க வேண்டி வரும்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
Tags:    

Similar News