செய்திகள்
சிவசேனா

மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: சிவசேனா வலியுறுத்தல்

Published On 2020-06-10 03:29 GMT   |   Update On 2020-06-10 03:29 GMT
கொரோனா பரவலுக்கு மத்தியில் ஊரடங்கு தளர்வால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
மும்பை :

நாட்டிலேயே கொரோனாவால் மிகமோசமாக பாதிக்கப்பட்டு உள்ள மகாராஷ்டிராவில் 5-ம் கட்டமாக ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மாநிலத்தில் மிஷன் பிகின் அகெய்ன் திட்டத்தின் மூலம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

எனவே இனி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர் நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. இருந்தபோதிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. ஆனால் மக்கள் வைரஸ் பற்றிய அச்சம் இல்லாமல் கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறார்கள்.

ஊரடங்கு முடிந்த பிறகு சவால்கள் அதிகரிக்கும். அரசாங்கம் மிகவும் கண்டிப்புடன் இருக்கும். எனவே மக்கள் அத்தகைய நிலைமை ஏற்பட அனுமதிக்க கூடாது. ஊரடங்கு காலத்தில் கூட கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை.

தற்போதைய தேவை, ஊரடங்கு தளர்த்தப்பட்டதில் பிரச்சினை இல்லை என்பதை உறுதிபடுத்த மக்கள் தங்களது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மெரின்டிரைவில் காலை நேரத்தில் மக்கள் நடைபயற்சிக்காக அதிக அளவில் வெளியே வருகிறார்கள். இதுபோன்ற நிலைமை இருந்தால் அது பிரச்சினையை மேலும் கடினமாக்கும்.முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஊரடங்கை உடனடியாக திரும்ப பெற விரும்பவில்லை. ஆனால் மற்ற அரசியல் தலைவர்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News