செய்திகள்
எடியூரப்பா

மாநிலங்களவை தேர்தல்: வேட்பாளர்கள் குறித்து கட்சி மேலிடம் என்னுடன் விவாதித்தது- எடியூரப்பா

Published On 2020-06-10 02:58 GMT   |   Update On 2020-06-10 02:58 GMT
மாநிலங்களவை தேர்தல் விஷயத்தில் வேட்பாளர்கள் குறித்து கட்சி மேலிடம் என்னுடன் விவாதித்தது என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு :

மாநிலங்களவையில் கர்நாடகத்தை சேர்ந்த 4 எம்.பி.க்களின் பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து அந்த 4 இடங்களுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் கர்நாடக பா.ஜனதா சார்பில் போட்டியிட உமேஷ்கட்டி எம்.எல்.ஏ.வின் சகோதரர் ரமேஷ்கட்டி, பிரபாகர் கோரே, பிரகாஷ் ஷெட்டி ஆகியோரின் பெயர்கள் கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அந்த பெயர்களை நிராகரித்துவிட்ட மேலிடம், பிரபலம் இல்லாத கட்சி நிர்வாகிகள், அசோக் கஸ்தி, ஈரண்ண கடாடி ஆகியோரின் பெயரை அறிவித்தது. இதனால் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு எடியூரப்பாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எங்கள் கட்சி மேலிட தலைவர்கள், சாமானிய தொண்டர்கள் 2 பேருக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கியுள்ளனர். இது தொண்டர்களுக்கு அளிக்கப்பட்ட பரிசு. இதற்காக பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை பாராட்டுகிறேன்.

மாநிலங்களவை எம்.பி. ஆகும் 2 பேரும் சிறப்பான முறையில் பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பா.ஜனதா கட்சியில் மட்டுமே, சாமானிய தொண்டர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் இத்தகைய முடிவு எடுக்க முடியும். எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வேறு சில பெயர்களை பரிந்துரைத்தோம்.

இறுதியில், எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வேட்பாளர்கள் குறித்து என்னுடன் விவாதித்து, சாமானிய தொண்டர்கள் 2 பேருக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதுபற்றி நாங்கள் விவாதித்தோம். அதன் பிறகு எங்கள் கட்சி மேலிடம் முடிவை அறிவித்தது. கர்நாடகத்திற்கு மட்டும் இத்தகைய முடிவை கட்சி மேலிடம் எடுக்கவில்லை. மற்ற மாநிலங்களிலும் இத்தகைய முடிவு எடுக்கப்படுகிறது. அதனால் நாங்கள் இதை வரவேற்கிறோம்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Tags:    

Similar News