செய்திகள்
தேவேகவுடா, குமாரசாமி

மாநிலங்களவை தேர்தலில் தேவேகவுடா போட்டி: குமாரசாமி அறிவிப்பு

Published On 2020-06-09 03:37 GMT   |   Update On 2020-06-09 03:37 GMT
மாநிலங்களவை தேர்தலில் தேவேகவுடா போட்டியிடுவார் என்றும்,இன்று(செவ்வாய்க்கிழமை) மனுதாக்கல் செய்வார் என்றும் குமாரசாமி அறிவித்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள பிரபாகர் கோரே, பி.கே.ஹரிபிரசாத், ராஜீவ்கவுடா, குபேந்திரரெட்டி ஆகியோரின் பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து அந்த 4 இடங்களுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான மனு தாக்கல் செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இந்த தேர்தலை பொறுத்தவரையில் எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் பா.ஜனதா 2 இடத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறுவது உறுதி. 4-வது இடத்தை கைப்பற்ற காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகளிடம் போதுமான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இல்லை. ஒரு எம்.பி. வெற்றி பெற 48 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

ஆனால் ஜனதா தளம்(எஸ்) கட்சியிடம் 34 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். தேவேகவுடா இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அவரது கட்சி மற்றும் குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர். தேவேகவுடா போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு வழங்க தயாராக இருந்தது. இந்த நிலையில் தேவேகவுடாவை அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நேற்று முன்தினம் இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது சோனியா காந்தி, மாநிலங்களவை தேர்தலில் 4-வது இடத்திற்கு போட்டியிடுமாறும், காங்கிரஸ் ஆதரவு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதை தேவேகவுடா ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாநிலங்களவை தேர்தலில் தேவேகவுடா போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், “எங்கள் கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவர் நாளை(அதாவது இன்று) மனு தாக்கல் செய்ய உள்ளார். அனைவரின் ஆலோசனையை ஏற்று தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்த தேவேகவுடாவுக்கு நன்றி. அவர் மக்களிடம் இருந்து வெற்றி, தோல்வி இரண்டையும் சந்தித்துள்ளார். மக்கள் வழங்கிய ஆதரவால் அவர் நாட்டின் உயர்ந்த அதிகாரம் கொண்ட பதவியை அடைந்தார். மாநிலங்களவை தேர்தலில் தேவேகவுடாவை போட்டியிட வைக்க நாங்கள் மேற்கொண்ட முயற்சி அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்.
Tags:    

Similar News