செய்திகள்
வெங்கையா நாயுடு

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய புள்ளி விவரங்களை சேகரிப்பது அவசியம்: வெங்கையா நாயுடு கருத்து

Published On 2020-06-07 07:26 GMT   |   Update On 2020-06-07 07:26 GMT
தொழில்திறன்களை கற்றுத்தந்து வேலைவாய்ப்புகளை அளிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய புள்ளிவிவரங்களை வைத்திருப்பது அவசியம் என்று வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
புதுடெல்லி, ஜூன்.7-

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ‘கொரோனாவை ஒடுக்கும் வழிமுறைகள்’ குறித்து தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவலால் ஏழைகள், தினக்கூலி தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழைகள், புலம்பெயர் தொழிலாளர்கள் ஆகியோரின் துயரத்தை தணிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளன.

ஆனால் சமீபத்திய நிகழ்வுகள், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த முறையான புள்ளி விவரங்களை வைத்திருப்பது அவசியம் என்று உணர்த்துகிறது. அத்தகைய விவரங்கள் இருந்தால்தான், அவர்களுக்கு தொழில்திறன்களை கற்றுத்தந்து, அவரவர் இடங்களிலேயே வேலைவாய்ப்பை அளிக்க அரசாங்கத்தால் முடியும்.

மேலும், தங்கள் நலனுக்கான திட்டங்கள் குறித்து புலம்பெயர் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள ஆரம்பத்தில் வினோதமாக இருந்த பழக்கவழக்கங்கள் எல்லாம் இப்போது இயல்பான ஒன்றாகி விட்டன. உயிர் பிழைக்கும் ஆவலில் உந்தப்பட்டு, இவற்றுக்கு மக்கள் பழகி விட்டனர். மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா கொரோனா பிரச்சினையை கையாண்ட விதம் பாராட்டுக்கு உரியது. ஊரடங்கு இல்லாவிட்டால், உயிரிழப்பு பலமடங்கு அதிகரித்து இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இருப்பினும், இதுவரை கிடைத்த பலன்களை ஊரடங்கு தளர்வுகள் கெடுத்துவிடக்கூடாது. இனிவரும் வாரங்கள் மிகவும் முக்கியமானவை. எனவே, மெத்தனம் கூடாது. கொரோனா வளையத்தை உடைப்பதில், அரசுக்கும், மக்களுக்கும் கூட்டுப்பொறுப்பு இருக்கிறது.

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
Tags:    

Similar News