செய்திகள்
காயமடைந்த பசு

கேரளா போல் இமாசலிலும் கொடூரம் - வெடிமருந்து கலந்த உணவை மென்றதால் காயமடைந்த கர்ப்பிணி பசு

Published On 2020-06-06 19:39 GMT   |   Update On 2020-06-06 19:39 GMT
கர்ப்பிணி பசுவுக்கு வெடிமருந்தை உணவில் கலந்து கொடுத்ததால் அதன் வாய் சிதைந்து காயமடைந்தது இமாசலப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிம்லா:

கேரளாவின் பாலக்காடு பகுதியில் பசியால் சுற்றித் திரிந்த கர்ப்பிணி யானைக்கு சிலர் அன்னாசி பழத்துக்குள் வெடி மருந்துகளை வைத்து சாப்பிட கொடுத்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த யானையின் மரணத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு குரல்களும் கண்டனங்களும் வெளியாகின.

இந்நிலையில், இமாசலப் பிரதேசத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்துட்டா பகுதியில், கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவு உருண்டைக்குள் வெடி வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கடித்த பசுவின் வாய் சிதைந்து படுகாயமடைந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பசுவின் உரிமையாளர் குர்தயால் சிங் காயமடைந்த கர்ப்பிணி பசுவின் வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றியபோது வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த சம்பவம் மே 26-ம் தேதி நடைபெற்றதாக கூறப்படுகிறது. பசுவின் உரிமையாளர் குர்தயால் சிங் இந்த கொடூரமான செயலுக்கு தனது அண்டை வீட்டார் தான் காரணம் என குற்றம்சாட்டி உள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டு விலங்குகளை, முக்கியமாக நீல காளைகள் மற்றும் காட்டுப்பன்றிகளைக் கொல்ல, தங்கள் பயிர்களைப் பாதுகாக்க பட்டாசுகளை கோதுமை மாவு உருண்டைக்குள், வெடி  வைப்பது விவசாயிகளிடையே ஒரு பொதுவான நடைமுறையாகும் என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News