செய்திகள்
எடியூரப்பா

கிசான் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன்: எடியூரப்பா

Published On 2020-06-06 03:24 GMT   |   Update On 2020-06-06 03:24 GMT
கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு :

கால்நடைத்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அத்துறை மந்திரி பிரபுசவான் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

“கிசான் கிரெடிட் அட்டை மூலம் விவசாயிகள் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் பெறலாம். இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளும் அளவுக்கு அதிகாரிகள் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிவமொக்கா, சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களில் குரங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதை தடுக்க தேவையான தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ரூ.80 கோடி செலவில் குடிசை பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு 7.75 லட்சம் லிட்டர் பால் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டது. ஆடு, கோழி இறைச்சி வினியோகத்தில் எந்த தடையும் ஏற்படவில்லை. ஊரடங்கின்போது, மைசூரு மற்றும் தாவணகெரேயில் பறவை காய்ச்சல் உண்டானது. பீதரில் பன்றி காய்ச்சல் பரவியது. இதை வெற்றிகரமாக செயல்பட்டு மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.”

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

கூட்டத்தில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், வளர்ச்சி கமிஷனர் வந்திதா சர்மா, செயலாளர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News