செய்திகள்
மேனகா காந்தி

கர்ப்பிணி யானை கொலை விவகாரத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேச்சு: மேனகா காந்தி மீது வழக்குப் பதிவு

Published On 2020-06-05 17:14 GMT   |   Update On 2020-06-05 17:14 GMT
கர்ப்பிணி யானை அன்னாசிப் பழத்தில் வெடி வைத்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவதூறாகப் பேசியதாக மேனகா காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரத்தில் கர்ப்பிணி யானை அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மேனகா காந்தி செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது ‘‘யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடிவைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் வயநாடு எம்.பி. ராகுல் காந்தி என்ன நடவடிக்கை எடுத்தார்.

மலப்புரம் வயநாடு தொகுதிக்குல்தானே வருகிறது. மலப்புரம் மாவட்டத்தில் வனவிலங்கு வேட்டையாடுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதைத் தீர்க்க ராகுல் காந்தி என்ன நடவடிக்கை எடுத்தார். வெறும் பேச்சில் மட்டும் ஆர்வம் காட்டாமல் ராகுல் காந்தி இதுபோன்ற பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டு.

இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்று கேரள வனத்துறைச் செயலாளரை நீக்க வேண்டும், அமைச்சரையும் நீக்க வேண்டும். யானைகள் இதுபோல் கொல்லப்படுவது குறித்து 6 ஆயிரம் பக்கத்தில் எங்கள் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறோம். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.

இதுவரை 11 ஆயிரம் யானைகள் கொல்லப்பட்டுள்ளன, உச்ச நீதிமன்றத்தில் எங்கள் வழக்கு முடியும் முன் இன்னும் எத்தனை யானைகள் கொல்லப்படப் போகின்றனவோ தெரியவில்லை’’ எனத் தெரிவித்தார்

மேலும், மேனகா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கேரள வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை யானைகள் கொல்லப்பட்டதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரளாவில் உள்ள கோயில்களிலும், தனியார் தரப்பிலும் யானைகளின் கால்களை உடைத்தும், நகங்களைப் பிடுங்கியும், பட்டினிபோட்டும் இதுவரை 600 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. கேரள மாநிலத்திலேயே மலப்புரம் மாவட்டத்தில்தான் வனவிலங்குகளுக்கு எதிராக அதிகமான கொடுஞ்செயல்கள் நடக்கின்றன. ஆனால் இதுவரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ எனக் கூறியிருந்தார்.

இதற்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவரை ரமேஷ் சென்னிதாலா, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். யானை உயிரிழந்த பிரச்னையை மேனகா காந்த திசை திருப்புவதாகவும், இது இரு சமூகங்களுக்கு இடையே கலவரத்தைத் தூண்டும் விதமாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டினர். யானை கொல்லப்பட்ட இடம் பாலக்காடு மாவட்டம் என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் மலப்புரம் மாவட்ட காவல் ஆணையர் அலுவலக்தில் மேனகா காந்தி மீது ஜமீல் என்பவர் புகாரளித்துள்ளார். இதனையடுத்து மேனகா காந்தி மீது கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
Tags:    

Similar News