செய்திகள்
காங்கிரஸ் கொடிகள் ஏந்தி வரும் தொண்டர்கள் (கோப்பு படம்)

குஜராத்தில் மேலும் ஒரு காங். எம்எல்ஏ ராஜினாமா- மாநிலங்களவை தேர்தலில் கடும் பின்னடைவு

Published On 2020-06-05 07:49 GMT   |   Update On 2020-06-05 07:51 GMT
குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
காந்திநகர்:

குஜராத் மாநிலத்தில் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இதில் பாஜக சார்பில் 3 பேரும், காங்கிரஸ் சார்பில் இருவரும் என 5 பேர் போட்டியிடுகின்றனர். பாஜக சார்பில் அபய் பரத்வாஜ், ரமிலா பாரா, நர்ஹாரி அமின் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் சக்திசின்ஹா கோகில், பரத்சின்ஹா சோலங்கி இருவரும் போட்டியிடுகின்றனர்.

மாநிலங்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் ஆளும் பாஜக அரசுக்கு தற்போது 103 எம்எல்ஏக்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 68 எம்எல்ஏக்கள் இருந்தனர்.  

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களான அக்சய் படேல், ஜிது சவுத்ரி இருவரும் புதன்கிழமை மாலையில் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியைச் சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அந்தக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் திரிவேதி அறிவித்தார்.

இன்று மேலும் ஒரு  காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்தார். மோர்பி தொகுதி எம்எல்ஏ பிரிஜேஷ் மெர்ஜா  தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் 65 ஆகக் குறைந்தது.

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரு வேட்பாளர்களை நிறுத்தி உள்ள நிலையில், அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து, அக்கட்சியின் பலம் குறைந்ததால் ஒரு வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கட்சியை உடைக்கும் வேலையில் பாஜக ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதனை பாஜக மறுத்துள்ளது.
Tags:    

Similar News