செய்திகள்
உச்ச நீதிமன்றம்

முழு சம்பளம் வழங்காத முதலாளிகள் மீது நடவடிக்கை கூடாது- உத்தரவை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்

Published On 2020-06-04 10:53 GMT   |   Update On 2020-06-04 10:53 GMT
ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் முழு ஊதியத்தை நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என்ற அரசாணை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஊரடங்கு காலத்தில் நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் முழு ஊதியத்தையும் அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து, அரசாணை வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணை  திரும்ப பெறப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்து, இது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில், ஊரடங்கை காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு மார்ச் 25ம்தேதி முதல் மே 17 வரை மட்டுமே. அதாவது இந்த 54 நாட்களுக்கு பிறகு அரசாணையானது திரும்ப பெறப்பட்டுவிட்டது. அதன்பின்னர் பணிக்கு திரும்பாத ஊழியர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்க வேண்டியது அவசியம் இல்லை’ என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். மேலும், ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்குவதற்கான உத்தரவை மீறியதற்காக முதலாளிகளுக்கு எதிராக எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ஜூன் 12 வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News