செய்திகள்
மத்திய அரசு

வெளிநாட்டு தொழில் அதிபர்கள் இந்தியா வர அனுமதி - மத்திய அரசு அறிவிப்பு

Published On 2020-06-04 07:36 GMT   |   Update On 2020-06-04 07:36 GMT
கொரோனா ஊரடங்கு பிறப்பித்த பின்னர் முதல்முறையாக வெளிநாட்டு தொழில் அதிபர்கள் இந்தியா வர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இன்னும் அது தொடர்கிறது. கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு இந்த மாதம் 30-ந் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் ஊரடங்கால் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படவில்லை. அன்னிய முதலீடுகள் புதிதாக வரவில்லை. இந்திய பொருளாதாரமும் சீர்குலைந்து இப்போதுதான் மெல்ல மெல்ல தொழில், வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.



இந்த நிலையில், கொரோனா ஊரடங்குக்கு பின்னர் முதல்முறையாக வெளிநாட்டு தொழில் அதிபர்கள், சுகாதார வல்லுனர்கள், என்ஜினீயர்கள் இந்தியா வர மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டது.

* பின்வரும் வகையிலான வெளிநாட்டினரை இந்தியாவுக்கு வர அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தொழில் அதிபர்கள் இந்தியாவுக்கு வர்த்தக விசாவில் (விளையாட்டு துறையினருக்கான பி-3 விசா தவிர்த்து) திட்டமிடப்படாத வணிக மற்றும் தனி விமானங்களில் இந்தியா வரலாம்.

* இந்திய சுகாதார துறை நிறுவனங்களில் (ஆய்வுக்கூடங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்பட) தொழில் நுட்ப வேலைக்காக வெளிநாட்டு சுகாதார வல்லுனர்கள், சுகாதார ஆராய்ச்சியாளர்கள், என்ஜினீயர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் வரலாம். அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட சுகாதார நிறுவனம், மருந்து நிறுவனம், பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அழைப்புக்கு உட்பட்டு வரலாம்.

* வெளிநாட்டு என்ஜினீயர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்தியாவில் அமைந்துள்ள வெளிநாட்டு வணிக நிறுவனங்களின் சார்பாக வர விரும்பினால் வரலாம். இதில் அனைத்துவகை உற்பத்தி நிறுவனங்கள், வடிமைப்பு பிரிவுகள், மென்பொருள், தகவல் தொழில் நுட்ப பிரிவுகள் அடங்கும்.

நிதித்துறை நிறுவனங்களும் (வங்கிகள் மற்றும் வங்கித்துறை சாராதவை) அடங்கும்.

* எந்திரங்களை நிறுவும் பணிக்காக, பழுது பார்க்க, பராமரிக்க இந்தியாவுக்கு தொழில் நுட்ப வல்லுனர்கள், என்ஜினீயர்கள் பதிவு செய்யப்பட்ட இந்திய வணிக நிறுவனத்தின் அழைப்பின் பெயரில் வரலாம்.

* வெளிநாட்டினரின் மேற்கண்ட பிரிவினர் புதிய வர்த்தக விசா அல்லது வேலை வாய்ப்பு விசாவை பொருந்தக்கூடிய வகையில், அந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பெற வேண்டும்.

இந்திய தூதரகங்களில் நீண்ட கால பல நுழைவு வர்த்தக விசாவை வைத்திருக்கும் வெளிநாட்டினர் சம்மந்தப்பட்ட இந்திய தூதரகத்தில் இருந்து வர்த்தக விசாவை பெற வேண்டும்.

* முன்னர் பெறப்பட்ட எந்தவொரு மின்னணு விசாவின் மூலம் இந்தியா வருவதற்கு அனுமதி கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News