செய்திகள்
கர்ப்பிணி யானை

அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து கர்ப்பிணி யானை கொலை- நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Published On 2020-06-03 05:45 GMT   |   Update On 2020-06-03 05:45 GMT
கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து கர்ப்பிணி யானை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.
மலப்புரம்:

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள வெள்ளியாற்றில் கடந்த வாரம் கர்ப்பிணி யானை ஒன்று நின்ற நிலையில் இறந்து இருந்தது. யானையின் இறப்புக்கான காரணத்தை மலப்புரம் மாவட்ட வன அதிகாரி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட, நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.

காட்டு யானை உணவு தேடி கிராமத்திற்கு வந்த நிலையில், யாரோ பட்டாசுகள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை உணவாக தந்துள்ளனர். நம்பி வாங்கி உண்ட யானை, பழத்தை கடிக்கும் போது வெடி மருந்து வெடிக்க, அதன் வாய் மற்றும் நாக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இன்னும் 18 அல்லது 20 மாதங்களுக்குள் குட்டியை ஈனும் நிலையில் யானை இருந்தது.

வலியுடன் கிராமத்தின் தெருக்களில் ஓடியபோதும் யானை யாரையும் தாக்கவில்லை, எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. பட்டாசு வாய் மற்றும் நாக்கில் ஏற்படுத்திய படுகாயத்தால் அந்த யானை உணவு உட்கொள்ள முடியாமல் சில நாட்கள் கழித்து அந்த யானை உயிரிழந்துள்ளது.

காயத்தின் மீது ஈ உள்ளிட்ட பூச்சிகள் அண்டாமல் இருக்க, யானை ஆற்றில் நின்று தண்ணீரை வாயில் தெளித்துக்கொண்டே இருந்துள்ளது. தகவல் அறிந்த வனத்துறையினர் சுரேந்திரன், நீலகந்தன் என்ற இரு கும்கி யானைகளை அழைத்துசென்று, கர்ப்பிணி யானையை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், கர்ப்பிணி யானை இறந்த நிலையில் இருந்துள்ளது. இதனை அடுத்து, அப்பகுதியிலேயே யானையை அதிகாரிகள் இறுதி மரியாதை செய்து எரியூட்டினர். வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணனின் இந்த பேஸ்புக் பதிவு வைரலாக பரவி வருகிறது.
Tags:    

Similar News