செய்திகள்
ஜெகதீஷ் ஷெட்டர்

ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறாரா?: அவரே அளித்த பதில்

Published On 2020-06-03 04:28 GMT   |   Update On 2020-06-03 04:28 GMT
என்னை மீண்டும் முதல்-மந்திரி ஆக்குவது குறித்த தகவல் எனது கவனத்திற்கு வரவில்லை. முதல்-மந்திரியாவது குறித்து நான் யாருடனும் விவாதிக்கவில்லை என்று ஜெகதீஷ் ஷெட்டர் பதிலளித்துள்ளார்.
பெங்களூரு :

வட கர்நாடகத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் பெங்களூருவில் உமேஷ்கட்டி வீட்டில் ஒன்றுகூடி ரகசிய ஆலோசனை நடத்தினர். அவர்கள் எடியூரப்பாவை நீக்கிவிட்டு, முதல்-மந்திரி பதவிக்கு ஜெகதீஷ் ஷெட்டரை முன்னிறுத்த ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரிடம் உப்பள்ளியில் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

பா.ஜனதா ஒரு கட்டுப்பாடு மிக்க கட்சி. எம்.எல்.ஏ.க்கள் யாருக்காவது அதிருப்தி இருந்தால், அவர்கள் கட்சி தலைமையிடம் பேசி அதை தீர்த்துக்கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ.க்களுக்கு ஆசைகள் இருப்பது சகஜம் தான். ஆனால் பிரச்சினை எதுவாக இருந்தாலும் கட்சிக்குள் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

என்னை மீண்டும் முதல்-மந்திரி ஆக்குவது குறித்த தகவல் எனது கவனத்திற்கு வரவில்லை. முதல்-மந்திரியாவது குறித்து நான் யாருடனும் விவாதிக்கவில்லை. எடியூரப்பா சிறப்பான முறையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்துகிறார். எங்கள் கட்சி பலமாக உள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய முறையில் ஆலோசனை நடத்துவது கட்சியின் எதிர்கால நலனுக்கு நல்லதல்ல.

பிரச்சினைகள் குறித்து கட்சி தலைமையிடம் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. பிரதமர் மோடி கொரோனா பரவலை சிறப்பான முறையில் செயல்பட்டு தடுத்து நாட்டை காப்பாற்றியுள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் தேவையின்றி குறைகளை சொல்கின்றன. கொரோனா மரண விகிதம் பிற நாடுகளைவிட இங்கு குறைவாக உள்ளது. பிரச்சினைகளில் இருந்து நாட்டை காக்கும் பணியை பிரதமர் மோடி சிறப்பான முறையில் செய்து வருகிறார். கொரோனா பரவலை தடுப்பதில் மோடி வெற்றி பெற்றுள்ளார்.”

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
Tags:    

Similar News