செய்திகள்
சிவசேனா

பிரதமர் மோடி செய்த தவறுகளை எவ்வாறு சரி செய்வார்?: சிவசேனா கேள்வி

Published On 2020-06-02 03:18 GMT   |   Update On 2020-06-02 03:18 GMT
கொரோனா ஊரடங்கு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் பிரதமர் மோடி செய்த தவறுகளை எவ்வாறு சரி செய்வார்? என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
மும்பை :

கடந்த ஆண்டு மே மாதம் 30-ந் தேதி நரேந்திர மோடி 2-வது முறையாக பதவி ஏற்றார். அவரது தலைமையிலான மத்திய அரசு ஓராண்டை நிறைவு செய்து 2-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து உள்ளது. இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

நரேந்திர மோடி போன்ற தலைமை கிடைப்பது இந்தியாவுக்கு அதிர்ஷ்டம். அவர் நாட்டின் பல்வேறு பிரச்சினைகளில் உயர்ந்து இருக்கிறார். அவர் வலிமையான மற்றும் திறமையான தலைவர். அவருக்கு மாற்று இல்லை.

பிரதமராக மோடி சில நல்ல முடிவுகளை எடுத்துள்ளார். 60 ஆண்டுகளில் நிகழ்ந்த சில தவறுகளை போல (2014-க்கு முன்னர் காங்கிரஸ் நாட்டை ஆட்சி செய்த போது) கடந்த 6 ஆண்டுகளிலும் நாடு சில தவறுகளை கண்டது.

கொரேனாா ஊரடங்கு, பணமதிப்பிழப்பு (2016-ம் ஆண்டு) நடவடிக்கையால் இறந்தவர்களின் வாழ்க்கையை மீண்டும் எவ்வாறு கொண்டு வர முடியும்? இந்த தவறை எவ்வாறு சரி செய்வது?

இருப்பினும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை ரத்து செய்ததன் மூலம், முத்தலாக் முறையை ஒழித்ததன் மூலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தை தொடங்குவதன் மூலம் மோடி தனது சில தவறுகளை சரி செய்துள்ளார்.

1971-ம் ஆண்டு இந்திராகாந்தி பாகிஸ்தானை உடைத்து, வங்கதேசத்தை உருவாக்கி இந்திய பிரிவினைக்கு பழிவாங்கினார்.

அது ஒரு வரலாற்று சாதனை அல்லது தவறு என கருத வேண்டுமா?

ராஜீவ்காந்தி நாட்டில் டிஜிட்டல் புரட்சிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார். நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகியோர் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தியிருந்தனர். இதெல்லாம் தவறு என்றால் நீங்கள் (பா.ஜனதா) செய்த தவறுகளை எவ்வாறு சரி செய்ய போகிறீர்கள்?

கடந்த 70 ஆண்டுகளில் பாரதீய ஜனதாவை சேர்ந்த வாஜ்பாய் ஐந்தரை ஆண்டுகளாக பிரதமராக இருந்தார். வி.பி.சிங், சந்திரசேகர் போன்ற தலைவர்கள் சுமார் 2 ஆண்டுகள் பிரதமர்களாக இருந்தனர்.

இந்த காலமெல்லாம் வீணானது என்றும், 2014 முதல் கடந்த 6 ஆண்டுகளில் தான் இந்தியா வளர்ந்தது என்று சொல்வது தவறு.

முந்தைய அரசாங்கங்கள் தேசபக்தர் வீரசாவர்க்கரை அவமதித்து தவறு செய்து உள்ளது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் ஏன் வீரசாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கப்படவில்லை.

சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ஜம்மு காஷ்மீருக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. இந்திய-சீனா எல்லையில் பிரச்சினை தொடங்கி உள்ளது. நேபாளம் தனது நிலத்தை உரிமை கோருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News