செய்திகள்
உத்தவ் தாக்கரே

கொரோனா இல்லாத பகுதிகளில்பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே

Published On 2020-06-01 03:12 GMT   |   Update On 2020-06-01 03:12 GMT
மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் இல்லாத பகுதிகளில் பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
மும்பை :

நாட்டிலேயே மகாராஷ்டிரா தான் கொரோனா வைரசால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு உள்ளன. பெரும்பாலான பள்ளிகள் கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்பட்டு உள்ளன.

இந்தநிலையில், மாநிலத்தில் 15-ந் தேதி முதல் 2020-21 புதிய கல்வியாண்டு தொடங்கப்படும் என்று, இ-கற்றல் முறையில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து இருந்தார்.

இந்தநிலையில், மாநிலத்தில் பள்ளிக்கூடங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் மந்திரி வர்ஷா கெய்க்வாட்டும் பங்கேற்றார்.

இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசும் போது கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மற்றும் இணையதள வசதி இல்லாத தொலைதூர பகுதிகளில் சமூக விலகல் விதிமுறைகளை அமல்படுத்தி மீண்டும் பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டும். மற்ற இடங்களில் இ-கற்றல் முறையில் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தலாம். கூகுள் வலைதளங்களை சோதனை அடிப்படையில் பயன்படுத்தலாம். கொரோனா வைரஸ் குழந்தைகளின் கல்விக்கு ஒரு தடங்கலாக இருக்க கூடாது.

2020-21 கல்வியாண்டு இந்த மாதம் முதல் தொடங்க வேண்டும். இதில் மராட்டியம் நாட்டின் பிற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ வேண்டும்.

கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்பட்டு உள்ள பள்ளிகளை கிருமிநீக்கம் செய்து மீண்டும் அவற்றை பயன்படுத்த கூடியதாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News