செய்திகள்
திருவனந்தபுரத்தில் மழை

தென்மேற்கு பருவமழை அறிகுறி- கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை

Published On 2020-06-01 03:02 GMT   |   Update On 2020-06-01 03:02 GMT
தென்மேற்கு பருவமழையின் அறிகுறியாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்துவருகிறது.
திருவனந்தபுரம்:

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி 4 மாதங்கள் வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும். தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை இருக்கும். நடப்பு ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை ஜூன் 5ம்தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

அதன்பின்னர் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருந்ததால், ஜூன் 1ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் மாற்றம் செய்தது.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழையின் அறிகுறியாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யத் தொடங்கி உள்ளது.
திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை  பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை தொடர்பான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே  தென்கிழக்கு மற்றும் அருகிலுள்ள கிழக்கு-மத்திய அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று புயலாக மாறும் என்றும், இதன் காரணமாக கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. லட்சத்தீவு அருகே உருவாக உள்ள புதிய புயலுக்கு நிசர்கா என பெயரிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News