செய்திகள்
கொரோனா வைரஸ் பலி - கோப்புப்படம்

இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா

Published On 2020-05-31 11:33 GMT   |   Update On 2020-05-31 11:33 GMT
மராட்டியத்தில் கொரோனா தொற்றால் இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற,18 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மும்பை:

மராட்டிய மாநிலத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 940 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்து 168 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல நேற்று ஒரேநாளில் 99 பேர் உயிரிழந்தனர். இதுவரை மராட்டியத்தில் 2 ஆயிரத்து 197 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.

இந்தநிலையில்,  தானே அடுத்த உல்ஹாஸ்நகர் என்ற பகுதியை சேர்ந்த 40 வயது பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இறந்த பின் அந்த பெண்ணிற்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், அந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் தடையை மீறி 70 பேர் வரை பங்கேற்றதாக கூறப்படுகிறது.

மே 25ம் தேதி பெண்ணின் உடலை வெளியே எடுக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அதிகாரிகள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் இறுதி சடங்கு செய்வதற்காக இறந்த பெண்ணில் உடலை பையில் இருந்து வெளியே எடுத்தாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து இறுதிசடங்கில் பங்கேற்ற நெருங்கிய உறவினர்கள் உட்பட 70 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 18 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று நோய் சட்டத்தினை மீறியதற்காக இறந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று இம்மாத துவக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயதான நோயாளி ஒருவர் மரணமடைந்தார். உடலை திறந்து இறுதிச்சடங்கு செய்ததால் 20 பேருக்கு தொற்று பரவியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News