செய்திகள்
ஊரடங்கு உத்தரவு - கோப்புப்படம்

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு

Published On 2020-05-30 13:51 GMT   |   Update On 2020-05-30 18:03 GMT
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்தது. மற்ற இடங்களில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ளது.

இதற்கிடையே கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? என்ற கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக நேற்று மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா,  கடந்த சில தினம் முன்பு பிரதமர் மோடியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில், ஜூன் மாதம் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. அதேசமயம் பல கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-



* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும். அங்கு எந்த தளர்வும் இன்றி நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

* கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லையை உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்ட நிர்வாகம் வரையறுக்க வேண்டும்.

* கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் சப்ளை, அவரச மருத்துவ தேவைகள் தவிர அந்த பகுதிகளில் இருந்து யாரும் வெளியே செல்லவோ, அந்த பகுதிக்குள் வரவோ கூடாது.

* கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய்த்தொற்றை கண்டறிய வீடு வீடாக ஆய்வு செய்ய வேண்டும்.

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே மற்ற பகுதிகளில் மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. அங்கு அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், சில கட்டுப்பாடுகள் தொடரும்.

* கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே, நோய்த்தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கண்டறிந்து, அங்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

* முதல் கட்ட தளர்வாக 8-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்களை திறக்க அனுமதிக்கப்படுகிறது. விருந்தோம்பல் சேவைகளை தொடங்கலாம்.

* அடுத்ததாக மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுடன் கலந்து ஆலோசித்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் திறக்கப்படும்.

* கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் மாநில அரசுகள் ஆலோசனை நடத்த வேண்டும். அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் ஜூலை மாதம் முடிவு எடுக்கப்படும்.

* சூழ்நிலைகளை பொறுத்து சர்வதேச விமான சேவை, மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க முடிவு செய்யப்படும்.

* சூழ்நிலைகளை பொறுத்து சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான பார்கள், கலையரங்கங்கள் திறக்கப்படும்.

* இதேபோல் சூழ்நிலைகளை பொறுத்தே சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலாசார, மத விழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

* அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்காகவும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை யாரும் வெளியே வரக்கூடாது. இதற்கான தடை உத்தரவை உள்ளூர் அதிகாரிகள் பிறப்பிக்க வேண்டும்.

* மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் மனிதர்கள் சென்று வரவும், சரக்குகளை கொண்டு செல்லவும் தடை இல்லை. இதற்கு தனியாக அனுமதி அல்லது இணையதள பாஸ் (இ-பாஸ்) போன்ற எதுவும் தேவை இல்லை. என்றாலும் இதை அரசுகள் ஒழுங்கு படுத்த வேண்டும்.

* அண்டை நாடுகளுக்கான சரக்கு போக்குவரத்தை மாநிலங்கள் தடுக்கக்கூடாது.

* வழிகாட்டு நெறிமுறைகளுடன் பயணிகள் ரெயில்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சராமிக் சிறப்பு ரெயில்கள் உள்நாட்டு விமான போக்குவரத்து மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவது தொடர்ந்து நடைபெறும்.

* அத்தியாவசிய மற்றும் மருத்துவ தேவைகள் தவிர 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.

* பொது இடங்களிலும், வழிபாட்டு தலங்களிலும், பயணத்தின் போதும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

* பொது இடங்களில் குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

* கடைகளில் ஒரே சமயத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.

* திருமண விழாவில் 50 பேருக்கு மேலும், இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 20 பேருக்கு மேலும் கூடக்கூடாது.

* உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News