செய்திகள்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

பாதிப்பு அதிகம் தான் ஒப்புக்கொள்கிறோம், ஆனால் நிரந்தர ஊரடங்கு தீர்வல்ல- கெஜ்ரிவால்

Published On 2020-05-30 09:44 GMT   |   Update On 2020-05-30 09:44 GMT
டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதை ஒப்புக்கொள்ளும் அதேசமயம், நிரந்தர ஊரடங்கு தீர்வாக இருக்க முடியாது என கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் கெஜ்ரிவால் இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது என்பதை ஒப்பக்கொள்கிறோம். ஆனால் நாம் பீதி அடையக்கூடாது. இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை பற்றாக்குறை இருந்தாலும் தான் நாம் கவலைப்பட வேண்டும்.

கொரோனாவை கட்டுப்படுத்த நிரந்தர ஊரடங்கு தீர்வு ஆகாது. நாம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு முன்னேறி செல்ல வேண்டும். தேவையானதை விட அதிக ஏற்பாடுகளை செய்கிறோம். மக்கள் கொரோனாவை எதிர்கொண்டு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

கொரோனாவை எதிர்கொள்ள அரசு முழுமையாக தயாராக உள்ளது. கொரோனா வைரசை விட அரசு நான்கு படிகள் முன்னால் இருக்கிறது.

டெல்லியில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 398 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 2100 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் உள்ளனர். நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு லேசான அல்லது அறிகுறிகளே இல்லை. அவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, குணமடைந்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு 8500 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது இரண்டு மடங்காக அதாவது 17,386 என்ற அளவில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News