செய்திகள்
ஏர் இந்தியா விமானம்

பைலட்டுக்கு கொரோனா பாதிப்பு- பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு திரும்பிய சிறப்பு விமானம்

Published On 2020-05-30 08:41 GMT   |   Update On 2020-05-30 08:41 GMT
ரஷியாவுக்கு சென்றுகொண்டிருந்த சிறப்பு விமானத்தை இயக்கிய பைலட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த விமானம் உடனடியாக டெல்லிக்கு அழைக்கப்பட்டது.
புதுடெல்லி:

ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமானத்தை இயக்கும் பைலட்டுகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில், அவர்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறி தென்பட்டால் அவர்கள் விமானத்தை இயக்க அனுமதிப்பதில்லை.

இந்நிலையில், ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக டெல்லியில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது. விமானம் உஸ்பெகிஸ்தான் வான்பகுதியில் சென்றபோது, பைலட்டுகளில் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து விமான பைலட்டுகளை தொடர்பு கொண்டு விவரத்தை கூறிய அதிகாரிகள், உடனடியாக டெல்லிக்கு திரும்பி வரும்படி உத்தரவிட்டனர்.

இதனால் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்ட ஏர் இந்தியா விமானம், மதியம் 12.30 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது. அந்த பைலட் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

டெல்லியில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன்பாக, பைலட்டின்  மருத்துவ பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த குழு, பாசிட்டிவ் என்பதற்கு பதிலாக நெகட்டிவ் என தவறுதலாக படித்ததே இந்த குழப்பத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

மாஸ்கோவில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு, ஏர் இந்தியா வேறு விமானத்தை அனுப்ப ஏற்பாடு செய்தது.
Tags:    

Similar News