செய்திகள்
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் சோனியாக காந்தி

புலம்பெயர் தொழிலாளர்களின் அபாயக்குர​ல் மத்திய அரசின் காதில் கேட்கவில்லையா?: சோனியாகாந்தி கேள்வி

Published On 2020-05-28 11:27 GMT   |   Update On 2020-05-28 11:27 GMT
பசி, பட்டினியுடன் கொளுத்தும் வெயிலில் காலணி கூட இல்லாமல் நடந்தே செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் அபாயக்குர​ல் மத்திய அரசின் காதில் கேட்கவில்லையா? என சோனியா கேள்வில் எழுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுப்பதற்காக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் 2 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்த ஊரடங்கால் தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முடங்கிப்போய் விட்டன. பஸ், ரெயில் போன்ற பொது போக்குவரத்து சாதனங்கள் முடங்கி விட்டன.

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள், மீண்டும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப கடும் அவஸ்தைகளை அனுபவித்து வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கால்நடையாகவும், சைக்கிளிலும், லாரிகளிலும், வழியில் கிடைத்த வாகனங்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். அவர்களில் பலரும் வழியில் விபத்துக்களை சந்தித்து உயிரிழக்கும் கொடுமைகள் வேறு அரங்கேறுகின்றன.

கொளுத்தும் வெயிலில் கால்களில் செருப்பு கூட இன்றி குடும்பம் குடும்பமாய் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தார்ச்சாலைகளில் மூட்டையும், முடிச்சுமாய் நடந்து செல்வதை பார்க்கிறபோது நெஞ்சம் பதறுகிறது. இதுபற்றிய தகவல்கள், ஊடகங்களில் தொடர்ந்து வெளியானதை தொடர்ந்து மத்திய அரசு சிறப்பு ரெயில்களை இயக்க தொடங்கியது. இந்த சிறப்பு ரெயில்களிலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு இடமில்லை. எனவே இன்னும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கிற அவலம் தொடர்கிறது.

இந்நிலையில், பசி, பட்டினியுடன், கொளுத்தும் வெயிலில், காலணி கூட இல்லாமல் நடந்தே செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் அபாயக்குர​ல் மத்திய பா.ஜ.க. அரசின் காதில் கேட்கவில்லையா? என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.



அடுத்த 6 மாதங்களுக்கு ஏழை குடும்பங்களுக்கு மாதம் 7, 500 ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள சோனியா காந்தி, முதல் கட்டமாக பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என பா.ஜ.க. அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக திடீரென வேலையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச மற்றும் பாதுகாப்பான பயணத்தை அவர்களது இல்லம் சேர உறுதி செய்யப்பட வேண்டும்.

வீடு திரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதிசெய்ய, என்.ஆர்.இ.ஜி.ஏ-யில் பணிபுரியும் நாட்களை 200 ஆக உயர்த்துமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News